நடிகர் விஜய் சேதுபதி, தமிழில் முன்னணி ஹீரோக்களில் ஒருவராக இருக்கிறார். ஹீரோ மட்டுமின்றி, வில்லன் கேரக்டர்களிலும் நடித்து அசத்தி வருகிறார். சில ஹீரோக்கள் வில்லனாக நடித்து விட்டால், அதே வில்லன் கேரக்டர் தொடருகிற சினிமாத்துறையில், ஹீரோ-வில்லன் என்ற இரண்டு விதமான கேரக்டர்களிலும் ரசிகர்கள் ஏற்றுக்கொண்ட நடிகர் விஜய் சேதுபதி.
தமிழில் பேட்ட படத்தில் ரஜினிக்கும், விக்ரம் படத்தில், கமலுக்கும் வில்லனாக நடித்தார். இப்போது, இந்தியில் வெளிவந்துள்ள ஜவான் படத்திலும் வில்லன் கேரக்டரில் நடித்து அசத்தி இருக்கிறார் விஜய் சேதுபதி. தமிழில் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், இந்தி என பிறமொழி படங்களிலும் விஜய் சேதுபதி முக்கிய நடிகராக வலம் வந்துக்கொண்டிருக்கிறார்.
இந்நிலையில், விஜய் சேதுபதி ஹீரோவாக நடிக்க நான் தமிழ் என்ற புதுப்படம் ஒன்றில் ஒப்பந்தம் ஆகி இருக்கிறார். இந்த படத்தில் ஹீரோயின் ஆக கீர்த்தி ஷெட்டியை ஒப்பந்தம் செய்துள்ளனர். இதை கேள்விப்பட்ட விஜய் சேதுபதி, படத்தின் கதாநாயகி கீர்த்தி ஷெட்டி என்றால், அவருடன் ஜோடியாக நடிக்க மாட்டேன் என அதிரடியாக கூறிவிட்டார்.
இதைக் கேட்ட படத்தின் இயக்குநர் உள்ளிட்ட படக்குழுவினர் ஏன் என்று விசாரித்த போது, நான் உப்பேனா என்ற தெலுங்கு படம் ஒன்றில், கீர்த்தி ஷெட்டிக்கு அன்பான அப்பாவாக நடித்து விட்டேன். மகளாக நினைத்து நடித்த அவருடன், என்னால் ஜோடியாக நடிக்க முடியாது. உண்மையில் கீர்த்தி ஷெட்டியை என் மகளாகவும், நான் அவரது தந்தையாகவுமே கருதி நடித்த நிலையில், அவருடன் நடிக்க முடியாது என திட்டவட்டமாக மறுத்துள்ளார்.
இந்த விஷயம் குறித்து, நடிகர் விஜய் சேதுபதியே சமீபத்தில் அளித்த ஒரு நேர்காணலில் வெளிப்படையாக இதை கூறி இருக்கிறார். அதாவது மகள் – தந்தை என்ற கேரக்டரில் ஒரு படத்தில் நடித்த பிறகு, அதே பெண்ணுடன் அடுத்த படத்தில், ஜோடியாக நடிப்பது அவரால் ஏற்றுக்கொள்ள முடியாதது என்பதை தெளிவுப்படுத்தி இருக்கிறார்.
ஆனால் தமிழ் மற்றும் தெலுங்கு சினிமா உலகைப் பொருத்த வரை பேத்தி வயது உடைய இளம் பெண்ணுடன் வயதான ஹீரோ குத்தாட்டம் போடுவது, ஒரே படத்தில் அப்பா – மகன் கேரக்டரில் ஒரு நடிகையை அம்மா என்று அழைப்பதும், அதே நடிகையுடன் அப்பா கேரக்டரில் காதல் காட்சிகளில் நடிப்பதும் வெகு சகஜமாக நடக்கிறது. ஆனால், விஜய் சேதுபதியின் இந்த மனப்பக்குவம் பார்த்து, ரசிகர்கள் அவரை பாராட்டி வருகின்றனர்.





