நடிகர் விஜய் சேதுபதி துவக்கத்தில் துணை நடிகராக சில படங்களில் நடித்திருக்கிறார். ஆனால் அந்த படங்களில், அவருக்கு வசனங்களும், கேரக்டர் பெயரும் இருக்காது. புதுப்பேட்டை, வெண்ணிலா கபடிக்குழு போன்ற படங்களை அதில் குறிப்பிட்டுச் சொல்லலாம். அதன்பிறகு தென்மேற்கு பருவக்காற்று என்ற படத்தில் முதன்முறையாக கதாநாயகனாக நடித்தார். அந்த படம் நல்ல வரவேற்பை ரசிகர்களிடம் பெற்றது.
தொடர்ந்து சூது கவ்வும், நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, பீட்சா, ரம்மி, பண்ணையாரும் பத்மினியும் போன்ற படங்களால் விஜய் சேதுபதிக்கு நல்ல வரவேற்பும், அடையாளமும் ரசிகர்கள் மத்தியில் கிடைத்தது. பிறகு படிப்படியாக அவரது படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. இதில் தர்மதுரை நல்ல பரிச்சயத்தை பெற்றுத் தந்தது.
விஜய் சேதுபதியை நல்ல நடிகராக அடையாளப்படுத்திய படங்களை அடுத்து, வில்லன் கேரக்டரிலும் நடித்து அசத்தினார். குறிப்பாக பேட்ட, விக்ரம், மாஸ்டர் ஆகிய படங்களில் வில்லனாக விஜய் சேதுபதி நடிப்பு ரசிகர்களை மிரட்டியது. இந்தியில் ஜவான் படத்திலும் ஷாருக்கானுக்கு வில்லனாக நடித்து பாலிவுட் ரசிகர்களையும் கவர்ந்தார்.
சில ஆண்டுகளாக விஜய் சேதுபதி படங்கள் சரியாக போகாத நிலையில், இப்போது 50வது படமாக அவரது நடிப்பில் வெளிவந்துள்ள மகாராஜா படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. வசூலும் கிட்டத்தட்ட 100 கோடி ரூபாயை நெருங்கிய நிலையில், இந்த படம் அமொிக்கா லாஸ் ஏஞ்சல்ஸில் நடந்த திரைப்பட விழாவில் இன்று திரையிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் சமீபத்திய நேர்காணல் ஒன்றில் பேசிய நடிகர் விஜய் சேதுபதி, ரொமாண்டிங் படங்களில் நடிக்க எனக்கு சரியான வாய்ப்பு இல்லை. ஆனால் நான் ரொமான்ஸ் நல்லா பண்ணுவேன். நானும் அப்படிப்பட்ட கதையை தேடிக்கிட்டு இருக்கேன். காதல் எப்பவும் தீர்ந்தே போகாது. காதல் காட்சிகளை எப்பவும் நான் ரொம்பவும் ரசிப்பவன்.
ஷூட்டிங் ஸ்பாட்டில் கேமரா முன்னாடி நடந்தாலும், சில நொடிகளே நடந்தாலும் நான் அந்த காதலை நிஜம் என்று நம்புகிறேன். ஆனால் எல்லாருக்கும் அப்படி காதல் வாய்ப்பதில்லை என்று கூறியிருக்கிறார் விஜய் சேதுபதி. ஆனால் விஜய் சேதுபதி நடித்த 96 தமிழ் சினிமாவில் மிகச்சிறந்த ரொமான்டிக் படம் என்பது குறிப்பிடத்தக்கது. அதனால் 96 படத்தில் நடிச்சிட்டு நீங்க இப்படி சொல்லலாமா, என்று ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர்.





