நவீன யுகத்தில் செல்போன் இல்லாத நபர்களையே நம்மால் பார்க்க முடியாது. ஆண்ட்ராய்டு போன் வந்ததிலிருந்து ஒவ்வொருவரும் அதன் பின்னாலே சுற்றித் திரிகின்றனர். தனக்கு எது வேண்டும் எது வேண்டாம் ஒரு பொருளில் என்ன இருக்கிறது என்பது உட்பட அனைத்தும் இங்கு இணையத்தில் கிடைப்பதால் அதனை அலசி ஆராய்கின்றனர்.
இதில், கூகுள் நிறுவனம் ஒட்டுமொத்த உலகத்தையும் உள்ளடக்கி அதற்கான தகவல்களை நமக்கு வழங்கி வருகிறது. என்ன வேண்டுமானாலும் அதில் சென்று நாம் தேடி அறிந்து கொள்ளும் வகையில் அது உள்ளது. இதில் திரைப்படங்கள் குறித்தும் நாம் அதிகம் தேடுவோம்.
அதில் 2024 ஆம் ஆண்டு இந்திய அளவில் அதிகம் தேடப்பட்ட திரைப்படங்கள் என்னென்ன என்பதை பட்டியலிட்டு இருக்கிறது google நிறுவனம். அதில் முதல் 10 திரைப்படங்களின் வரிசை வெளியாகி இருக்கிறது. இதில் பத்தாவது இடத்தில் இடம் பெற்று இருக்கிறது ஆவேசம் திரைப்படம். பகத் பாஸில் ஹீரோவாக நடித்த இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.
இதேபோல் ஒன்பதாவது இடத்தில், பிரபாஸின் சலார் திரைப்படம் உள்ளது. கே ஜி எஃப் இயக்குனர் பிரசாந்த் நீல் இந்த திரைப்படத்தை இயக்கியிருந்தார். கூகுளில் அதிகம் தேடப்பட்ட இந்திய திரைப்படங்களின் பட்டியலில் எட்டாவது இடத்தை பிடித்திருக்கிறது விஜயின் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் திரைப்படம். வெங்கட் பிரபு இயக்கிய இந்த திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது ஆனால் கலவையான விமர்சனத்தை பெற்றது.
இந்த பட்டியலில் விஜயின் படத்தை பின்னுக்கு தள்ளி முன்னணியில் இருக்கிறது விஜய் சேதுபதி நடித்த மகாராஜா திரைப்படம். கூகுள் கொடுத்திருக்கும் டாப் டென் பட்டியலில் ஆறாவது இடத்தை அந்த திரைப்படம் பெற்றுள்ளது. ஓடிடியில் வெளியான போது இந்த திரைப்படம் பிற மொழிகளிலும் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது இதற்கு காரணம் என்று கூறலாம். தற்போது சீனாவில் இந்த திரைப்படம் மொழிபெயர்க்கப்பட்டு வரவேற்பை பெற்று வருகிறது.
இந்தப் பட்டியலில் முதலிடத்தில் ஹிந்தி திரைப்படமான ஸ்திரி 2வும், இரண்டாவது இடத்தில் பிரபாஸ் அமிதாப்பச்சன் நடித்த கல்கி திரைப்படமும் இடம்பெற்றுள்ளன. மலையாளத்தை தாண்டி தமிழில் சக்கை போடு போட்ட மஞ்சுமல் பாய்ஸ் திரைப்படம் கூகுள் கொடுத்திருக்கும் பட்டியலில் ஏழாவது இடத்தை பெற்றிருக்கிறது.





