விஜய் டிவியில் கடந்த 2017ம் ஆண்டு முதல் பிக்பாஸ் நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. கடந்த 2017ம் ஆண்டு முதல் 2023ம் ஆண்டு வரை 7 ஆண்டுகளாக இந்த நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கினார். வாரத்தில் 2 நாட்கள் சனி ஞாயிறு மட்டுமே அவர் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு வந்து வீட்டுக்குள் இருப்பவர்களை சந்தித்து பேசுவது வழக்கம்.
உண்மையில் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு மிகப்பெரிய வரவேற்பை எதிர்பார்ப்பை ஏற்படுத்தியவர்களில் போட்டியாளர்களை விட தொகுப்பாளர் கமல்ஹாசனுக்கு நிறைய பங்கு உண்டு. போட்டியாளர்கள் வீட்டுக்குள் செய்யும் தவறுகளை பிரச்னைகளை வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல நெளிவுசுளிவுடன் அவரது பாணியில் பேசி கண்டிப்பார். வார்த்தைகளில் விளையாட்டு காட்டுவார்.
பிக்பாஸை காட்டிலும் பல நேரங்களில் கமல்ஹாசனின் நடவடிக்கைகள் பிக்பாஸ் நிகழ்ச்சியை மேலும் சுவாரசியமாக கொண்டு சென்றது. ஆனால் கடந்த சீசனில் கமல்ஹாசனையே விமர்சிக்கும் அளவுக்கு பிக்பாஸ் போட்டியாளர்கள் நடந்துக்கொண்டனர். ஒரு கட்டத்தில் கமல்ஹாசனும் விமர்சனங்களில் சிக்கும் சூழல் போட்டியாளர்களால் ஏற்பட்டது.
அதன்பிறகு சுதாரிக்கொண்ட நடிகர் கமல்ஹாசன், இதுவரை சினிமாவில் சம்பாதித்த பெயரை பிக்பாஸ் நிகழ்ச்சியால் களங்கப்படுத்தி விடக்கூடாது என்ற முடிவில் நிகழ்ச்சி தொகுப்பாளர் பொறுப்பில் இருந்து கடந்தாண்டு விலகி விட்டார். அதன்பிறகு நடிகர் விஜய் சேதுபதி தொகுப்பாளராக இருந்து வருகிறார். இவர் கமல் போல நாசூக்கு எல்லாம் பார்ப்பதில்லை. தரை லோக்கல் ரேஞ்சுக்கு இறங்கி பேசி போட்டியாளர்களை நேரடியாக தாக்குகிறார்.
வருகிற அக்டோபர் 5ம் தேதி பிக்பாஸ் நிகழ்ச்சி சீசன் 9 துவங்க உள்ளது. இந்த முறையும் நடிகர் விஜய் சேதுபதிதான் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க இருக்கிறார். இன்னும் போட்டியாளர்கள் குறித்த எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. ஆனால் கடைசி நேரத்தில் விஜய் சேதுபதி போட்டியாளர்களை வீட்டுக்குள் அறிமுகப்படுத்தி அனுப்பும் போதுதான் அது 100 சதவீதம் உண்மையாக இருக்கும்.
ஏற்கனவே பிக்பாஸ் போட்டியாளர்கள் என்று 15 பேர் கொண்ட ஒரு லிஸ்ட் வெளியான நிலையில் இப்போது பட்டிமன்ற பேச்சாளர் ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த மஞ்சுநாதன் பிக்பாஸ் வீட்டுக்குள் போட்டியாளராக வர உள்ளார் என்று ஒரு தகவல் வெளியாகி உள்ளது. கொங்கு தமிழில் இவர் பேசுவது மிகவும் ரசிக்கும்படி இருக்கும். விவசாயி. இவர் போட்டியாளராக வந்தால் தினமும் பிக்பாஸ் வீட்டுக்குள் தரமான சம்பவங்கள் நடக்கும். ஆனால் இந்த தகவல் உண்மையா உருட்டா என்பது அக்டோபர் 5ம் தேதிதான் உறுதியாக தெரிய வரும்.





