நடிகர் விஜய் இப்போது வெங்கட்பிரபு இயக்கத்தில் தனது 68வது படத்தில் நடித்துக்கொண்டு இருக்கிறார். இந்த படத்துக்கு கோட் என பெயர் வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதாவது கிரேட்டஸ்ட் ஆப் ஆல்டைம் என்ற பொருளில், எந்த நேரத்திலும், சிறந்த மனிதராக இருப்பது என விஜயை குறிப்பிடும் விதமாக இந்த பெயர் டைட்டிலாக இருப்பதாக கூறப்படுகிறது.
நடிகர் விஜய் இதுவரை 67 படங்களில் நடித்திருக்கிறார். இந்த கோட் டைட்டில் வைக்கப்பட்ட படம் 68 ஆக உள்ளது. இந்த படத்தை தொடர்ந்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் விஜய் 69ல் நடிப்பாரா அல்லது 2 ஆண்டுகள் இடைவெளியில் அரசியல் பணியில் ஈடுபடுவாரா என்பது பிறகுதான் தெரிய வரும்.
இந்நிலையில், நடிகர் விஜய் பல ஆண்டுகளுக்கு முன் பேசிய வீடியோ ஒன்று இப்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 1 நிமிடம் 16 நொடிகள் ஓடும் இந்த வீடியோவில், விஜய் மிகவும் கேஷூவலாக பேசியிருக்கிறார். அதில் தான் நடிக்க விரும்பும் கேரக்டர் குறித்தும் மிகவும் வெளிப்படையாக கூறியிருக்கிறார்.
விஜய் அந்த வீடியோவில் பேசியதாவது, முழுக்க முழுக்க வில்லனாக ஒரு படம் பண்ணவேண்டும் என்ற ஆசை இருக்கிறது. உதாரணத்துக்கு அமைதிப்படை படத்தில், சத்யராஜ் நடித்த அந்த அமாவாசை கேரக்டர். அது வில்லன்தான் என்றாலும், அந்த வில்லன் ரசிக்கிற மாதிரி, அந்த வில்லன் மேல கோபமே வராத மாதிரி ஒரு நக்கலாக பண்ணியிருப்பார். அந்த மாதிரி கேரக்டர் பண்ணனும் ஆசை இருக்கு.
பிரியமுடன் என்ற படத்தில் வில்லன் போன்ற கேரக்டர்தான் பண்ணியிருந்தேன். ஆனால், அம்மாவுக்கு அந்த கேரக்டர் பிடிக்கவில்லை. இந்த மாதிரி கேரக்டர் எல்லாம் பண்ணாதே, பிடிக்கவில்லை என்று கூறிவிட்டார். பொதுவான ரசிகர்கள் இந்த மாதிரியாக என் கேரக்டரை விரும்ப மாட்டார்கள் என அம்மா சொல்வதும் சரியாக இருக்கும் என்று நினைத்துக்கொண்டேன், என்று கூறியிருக்கிறார்.
ஆனால் அழகிய தமிழ் மகன் என்ற படத்தில், இரண்டு ரோல்களில் விஜய் நடித்திருந்தார். இதில் ஒரு கேரக்டர் ஏறக்குறைய வில்லன் கேரக்டர் போல தான் பண்ணியிருந்தார். இந்த படத்தில் பல காட்சிகளில் இந்த வீடியோவில் குறிப்பிட்டதை போல கிண்டலாக, நக்கலாக பேசி தான் விஜய் நடித்திருந்தார். ஆனால் இந்த வில்லன் நடிப்பு, ரசிகர்கள் மத்தியில் போதிய வரவேற்பை பெறவில்லை. படமும் வெற்றி பெறவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.





