நடிகர் விஜய் துவக்கத்தில் ஒரு நடிகராக வேண்டும் என்ற கனவோடு மட்டும்தான் தமிழ் சினிமாவுக்குள் வந்தார். ஆனால் அவரது தந்தை இயக்குநர் எஸ்ஏ சந்திரசேகர், விஜயை டாக்டராக்கி பார்க்க தான் ஆசைப்பட்டார். ஆனால் விஜய் ஆக்டராகி விட்டார். எனினும் மகனின் ஆசைக்காக ஒரு அப்பாவாக, டைரக்டராக அவர் பேருதவிகளை செய்தார்.
துவக்கத்தில் ரஜினியின் தீவிர ரசிகராக தன்னை காட்டிக்கொண்டவர்தான் விஜய். அண்ணாமலை பட டயலாக்கை பேசி காட்டிதான், தன் அப்பாவிடம் நடிக்கவே சம்மதிக்க வைத்திருக்கிறார். அதே போல் விஜயகாந்த் தம்பியாக, செந்தூரபாண்டி படம் மூலம் ரசிகர்கள் மத்தியில் நல்ல அறிமுகத்தை பெற்றார்.
இப்போது ஒரு படத்துக்கு 200 கோடி ரூபாய் சம்பளம் வாங்கும் அளவுக்கு தமிழ் சினிமாவில் உச்ச இடத்தில் இருக்கிறார் விஜய். இப்போது அவரது கால்ஷீட்டுக்காக தயாரிப்பாளர்கள் காத்திருக்கின்றனர். அவரிடம் கதை சொல்ல இயக்குநர்கள் காத்திருக்கின்றனர். விஜய் விரல் நீட்டி காட்டுபவர்தான் அவரது அடுத்த படத்தை தயாரிக்கவோ, இயக்கவோ முடியும்.
துவக்கத்தில் தனது ரசிகர் மன்றங்களை, விஜய் மக்கள் இயக்கமாக மாற்றிய விஜய், கொடியை அறிமுகப்படுத்தினார். இப்போது அந்த இயக்கத்தில் அரசியல் கட்சியை போன்ற ஒவ்வொரு பிரிவுளுக்கும் தனித்தனி அமைப்புகளை உருவாக்கி, அதற்கான நிர்வாகிகளை நியமித்துள்ளார்.
கடந்தாண்டில் தமிழ்நாடு முழுவதும் தொகுதி வாரியாக 10ம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத்தேர்வில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ, மாணவிகளுக்கு முறையே ரூ. 25 ஆயிரம், ரூ. 15 ஆயிரம், ரூ. 10 ஆயிரம் என பரிசுத்தொகையுடன் சான்றிதழ் வழங்கி குடும்பத்துடன் அவர்களை சென்னைக்கு அழைத்து, 3 வேளை உணவு விருந்து தந்து, பரபரப்பை ஏற்படுத்தினார் விஜய்.
சமீபத்தில் மழையால் பாதிக்கப்பட்ட தென்மாவட்ட மக்களுக்கு நெல்லையில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இதற்கெல்லாம் காரணம் கமல், சரத்குமார் போல தேர்தல் நேர அரசியல்வாதியாக மாறுவது அவரது இலக்கல்ல. வேட்டையன் ரஜினி டயலாக் போல, முதல்வர் என்ற பதவியே அவரது குறிக்கோள். எம்ஜிஆர், கருணாநிதி, ஜெயலலிதா ரேஞ்சுக்கு தனது அரசியல் பயணம் இருக்க வேண்டும். வருகிற 2026 தேர்தல், அல்லது அதற்கடுத்த தேர்தலுக்குள் முதல்வர் பதவி, எம்ஜிஆர், ஜெயலலிதா போல கடைசி வரை நிரந்தர முதல்வர் என்பதுதான் விஜய் டார்கடெ் என்று ஒரு நேர்காணலில் கூறியிருக்கிறார் மூத்த சினிமா பத்திரிகையாளர் வலைப்பேச்சு அந்தணன்.





