நடிகர் விஜயகாந்த், தமிழ் சினிமாவில் கடந்த 50 ஆண்டுகால வரலாற்றில் மறக்க முடியாத ஒரு சிறந்த கலைஞராக வலம் வந்தவர். அவரது பட்டப் பெயரே துவக்கத்தில் புரட்சிக்கலைஞர்தான். துவக்கத்தில் சின்ன சின்ன வேடங்களில் நடித்து, பிறகு ரஜினி, கமலுக்கு அடுத்தபடியான இடத்தை பிடித்தவர் விஜயகாந்த். மதுரை மண் வாசத்துக்குரிய அவர், தமிழக மக்களின் பாசத்துக்குரிய மனிதராக ஆனார்.
நடிகர் விஜயகாந்த் சினிமாவில் மட்டுமின்றி நிஜத்திலும் ஹீரோவாக இருந்தார். எம்ஜிஆரின் தீவிர ரசிகரான அவர், மக்களுக்கு உதவுவதில் அதிக ஆர்வம் காட்டினார். தனது பிறந்த நாளை மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவாக மாற்றிக் காட்டியவர். சினிமா ஷூட்டிங்கில் அனைவருக்கும் ஒரே விதமான உணவு என்ற சம உரிமையை கொண்டு வந்தவர்.
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தலைவராக பதவி வகித்த கேப்டன் விஜயகாந்த் சிங்கப்பூர், மலேசியா, துபாய் போன்ற நாடுகளில் நட்சத்திர கலை இரவு நிகழ்ச்சிகளை நடத்தி, நடிகர் சங்கத்தின் பல கோடி ரூபாய் கடன்களை அடைத்தார். மேலும் சங்கத்தின் இருப்பாகவும் ரூ. 1.75 கோடி வைத்தார். நலிந்த கலைஞர்களுக்கும் தேவையான உதவிகளை செய்தவர்.
துவக்கத்தில் இருந்தே விஜயகாந்துடன் நெருங்கிய நண்பராக இருந்தவர் இப்ராகிம் ராவுத்தர். அவருடன்தான் சினிமா ஆசையில் விஜயகாந்த், மதுரையில் இருந்து சென்னைக்கு வந்தார். பிரேமலதாவை திருமணம் செய்யும் வரை விஜயகாந்த் நடிக்கும் படங்களின் கதைகளை தேர்வு செய்ததும், கால்ஷீட், சம்பளம் உள்ளிட்ட விவகாரங்களை கவனித்துக்கொண்டதும் இப்ராகிம் ராவுத்தர்தான் என்பது குறிப்பிடத்தக்கது.
அதனால் விஜயகாந்த் படத்தில் நடிக்க வேண்டும் என்றால், முதலில் அவரது நண்பர் ராவுத்தரை பார்த்து கதை சொல்ல வேண்டும். அவருக்கு பிடித்திருந்தால் தான் விஜயகாந்த் கால்ஷீட் கிடைக்கும். இல்லை என்றால் கிடைக்காது. இந்நிலையில், பிரபல சினிமா தயாரிப்பாளர் கலைப்புலி தாணு விஜயகாந்த் நடித்த கூலிக்காரன் படத்தை தயாரித்தவர். அப்போது அவருக்கு ஏற்பட்ட அனுபவத்தை, சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் கூறியிருக்கிறார்.
நடிகர் விஜயகாந்தை வைத்து படம் எடுக்க நினைத்து, அவரது நண்பர் ராவுத்தரை நேரில் சந்தித்து கதை சொன்னேன். அதிக சம்பளம் சொன்னால், நான் வேண்டாம் என மறுத்து வெளியேறிவிடுவேன் என நினைத்து, விஜயகாந்தின் வழக்கமான சம்பளத்தை விட, 3 மடங்கு சம்பளம் அதிகமாக கேட்டார். உடனே நான் சம்மதித்து, எப்போது அட்வான்ஸ் வேண்டும் என்று கேட்க அசந்து போய்விட்டார். முதலில் கூலிக்காரன் படத்தை ரஜினியை வைத்து எடுக்க நினைத்திருந்தேன். ராவுத்தார் தான் விஜயகாந்தை வைத்து கூலிக்காரன் படத்தை எடுக்கச் சொன்னார், என்று அதில் தயாரிப்பாளர் தாணு கூறியிருக்கிறார்.





