சீயான் விக்ரம் தமிழ் சினிமாவின் தனித்துவமான நடிகர் என்பதை சினிமா ரசிகர்கள் பலரும் அறிந்திருப்பார்கள். ஆனால் சமீப காலமாக சீயான் விக்ரம் நடிக்கும் திரைப்படங்கள் சரியாக போவதில்லை. அதிலும் குறிப்பாக “கோப்ரா” திரைப்படம் வரலாறு காணாத தோல்வியை விக்ரமிற்கு கொடுத்தது. அதனை தொடர்ந்து “பொன்னியின் செல்வன்” திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருந்தாலும் அது விக்ரம் மட்டுமே ஹீரோவாக நடித்த திரைப்படம் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில்தான் “விக்ரம்” தற்போது பா.ரஞ்சித்தின் “தங்கலான்” திரைப்படத்தில் நடித்துள்ளார். பிரிட்டிஷ் ஆட்சியில் கேஜிஎஃப் பகுதியில் வாழ்ந்த ஒரு இனத்தின் வரலாற்றை அடிப்படையாக வைத்து இத்திரைப்படம் உருவாகி வருகிறது. இதில் விக்ரமுடன் பார்வதி, பசுபதி, மாளவிகா மோகனன் போன்ற பலரும் நடித்துள்ளனர். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில்தான் முடிவடைந்தது. சமீப காலமாக விக்ரம் கெரியரில் ஒரு திருப்புமுனையே ஏற்படவில்லை என்பதால் “தங்கலான்” திரைப்படம் நிச்சயம் பந்தயம் அடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் சீயான் விக்ரம் நடிக்க உள்ள அடுத்த திரைப்படத்தை குறித்த ஒரு முக்கிய தகவல் வெளிவந்துள்ளது. சமீபத்தில் மலையாளத்தில் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்ற திரைப்படம் “2018”. இத்திரைப்படம் 2018 ஆம் ஆண்டு கேரளாவில் வந்த மிகப்பெரிய வெள்ளத்தை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்ட திரைப்படமாகும்.

இவ்வாறு மாபெரும் வெற்றியை பெற்ற “2018” திரைப்படத்தின் இயக்குனரான ஜூட் அந்தனி ஜோசஃப்புடன் விக்ரம் தனது அடுத்த படத்தில் இணையவுள்ளார். இத்திரைப்படம் விக்ரமின் 62 ஆவது திரைப்படமாக இருக்கப்போகிறது. அது மட்டுமல்லாது இத்திரைப்படத்தில் விக்ரமுடன் விஜய் சேதுபதி, ராஷ்மிகா மந்தனா, நிவின் பாலி, கிச்சா சுதீப் ஆகியோர் நடிக்கவுள்ளதாகவும் இத்திரைப்படம் பேன் இந்தியா திரைப்படமாக உருவாக உள்ளதாகவும் கூறப்படுகிறது.





