நடிகர் விக்ரம் தமிழ் சினிமாவில் மிக முக்கியமான ஒரு நடிகராக முன்னணியில் இருந்து வருகிறார். பாலா இயக்கத்தில் சேது படத்தில் நடித்த பிறகு அவரது பெயருக்கு பின்னால் சியான் என்ற அடைமொழி ஒட்டிக்கொண்டது. நடிகர் கமலைப் போலவே தனது கேரக்டருக்காக உடலை வருத்திக்கொண்டு நடிக்கும் ஒரே நடிகர் விக்ரம் மட்டும்தான் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால் சாமி தில் தூள் இராவணன் போன்ற படங்களுக்கு கடந்த பல ஆண்டுகளாக சியான் விக்ரம் நடிப்பில் வந்த எந்த படமும் பெரிய அளவில் ரசிகர்களிடம் வரவேற்பை பெறவில்லை, பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்தாண்டில் பா ரஞ்சித் இயக்கத்தில் வெளியான தங்கலான் படமும் சியான் விக்ரமுக்கு பெரிய வரவேற்பை ரசிகர்களிடம் பெற்றுத் தரவில்லை.
இந்நிலையில் சியான் விக்ரம் துஷாரா விஜயன் எஸ்ஜே சூர்யா உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த மாதம் 27ம் தேதி வீர தீர சூரன் 2 படம் வெளியானது. சேதுபதி பண்ணையாரும் பத்மினியும் சித்தா படங்களை இயக்கிய இயக்குனர் அருண்குமார்தான் வீர தீர சூரன் 2 படத்தையும் இயக்கி இருந்தார். இந்த படம் கலவையான விமர்சனங்களை முதலில் பெற்றாலும் பிறகு படம் ஓட ஒட சில தினங்களில் பிக்கப் ஆனது.
ஒரு நாள் இரவில் நடக்கும் சம்பவங்களை மையப்படுத்தி உருவாக்கப்பட்ட இந்த படம் ரசிகர்களுக்கு பிடித்துப் போன நிலையில், படத்தின் வசூல் கணிசமாக அதிகரித்தது. முதல் நாளில் 3.5 கோடி ரூபாய், 2ம் நாளில் ரூ. 10 கோடி ரூபாய், 4 நாளில் ரூ. 27 கோடி ரூபாய் என வீரதீர சூரன் 2 படத்தின் அபரிமிதமான வசூல் பெரிய அளவில் உயர்ந்தது. இதற்கிடையே நடிகர் சியான் விக்ரம் தமிழ்நாடு கேரளா என மாநிலங்கள் வாரியாக நேரடியாக தியேட்டர்களுக்கு விசிட் அடித்து ரசிகர்களை சந்தித்தார்.
எப்படியும் இன்னும் ஓரிரு வாரங்களில் வீர தீர சூரன் படம் ரூ. 100 கோடி வசூலை எட்டிவிடும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இதுவரை 18 நாட்களில் இந்த படத்தின் மொத்த வசூல் ரூ. 69 கோடியை மட்டுமே கடந்துள்ளது. மேலும் பெரும்பாலான தியேட்டர்களில் வீர தீர சூரன் 2 படம் பார்க்க போதிய ரசிகர்களின்றி தியேட்டர் இருக்கைகள் காற்று வாங்குகின்றன.
இதற்கு காரணம் கடந்த 10ம் தேதி நடிகர் அஜீத்குமார் நடிப்பில் வெளியான குட் பேட் அக்லி படம்தான் என்று கூறப்படுகிறது. இந்த படத்தை காண ரசிகர்கள் கூட்டம் செல்வதால் வீர தீர சூரன் 2 திரையிட்ட தியேட்டர்கள் காற்று வாங்குகின்றன என்று தெரிய வந்துள்ளது. மேலும் அஸ்வத் மாரிமுத்து இயக்கிய டிராகன் படம் நன்றாக ஓடியதால், நடிகர் தனுஷ் இயக்கிய நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் படத்துக்கு ஏற்பட்ட அதே வசூல் பாதிப்பு இப்போது விக்ரம் நடித்த வீர தீர சூரன் 2 படத்துக்கும் ஏற்பட்டு விட்டதாகவும் சியான் விக்ரம் ரசிகர்கள் புலம்புகின்றனர்.





