நடிகர் விஷால் துவக்கத்தில் நல்ல நல்ல படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் மிக வேகமாக முன்னேறினார். நடிகர் விஷால் சிறந்த நடிகர் என்பதை அவன் இவன் படம் மூலம் டைரக்டர் பாலா நிரூபித்திருப்பார். ஆனால் நடிக்க தெரியாதவர் கூட டைரக்டர் பாரதிராஜா, பாலா, அமீர் போன்றவர்களின் இயக்கத்தில் நடித்தால் மாபெரும் நடிகர்களாகி மாறிவிடுவர் என்பதையும் மறுப்பதற்கில்லை.
அந்த வகையில் விஷால் நடிப்பில் பல பரிமாணங்களை காட்டி நடித்த படங்கள் ஒன்றிரண்டுதான் பெரும்பாலும் அவர் ஆக்சன் ஹீரோவாக தான் பல படங்களில் விஷால் நடித்தார். ஆனாலும் அவரது அதிரடி சண்டை காட்சிகளை ரசிகர்கள் மிகவும் விரும்பவே செய்தனர். அதனால் அவரது படங்களும் நல்ல வரவேற்பை பெற்றன.
இதற்கிடையே கடந்த 2017ம் ஆண்டில் இயக்குநர் மிஷ்கின் இயக்கத்தில் துப்பறிவாளன் என்ற படத்தில் கனியன் பூங்குன்றன் என்ற கேரக்டரில் டிடெக்டிவ் ஏஜண்டாக விஷால் நடித்திருந்தார். அவரது நண்பர் மற்றும் உதவியாளராக பிரசன்னா நடித்திருப்பார். உண்மையில் இந்த படத்தை பொருத்த வரை கனியன் பூங்குன்றனாகவே மிஸ்கின், விஷாலை மாற்றி காட்டியிருந்தார்.
விஷால் நடித்த படங்களில் துப்பறிவாளன் படம் அவருக்கு மிகப்பெரிய தனியிடத்தை பெற்றுத் தந்தது என்றால் அது மிகையல்ல. இதில் பாக்யராஜ் வயதான கெட்டப்பில், வில்லன் நடிப்பில் அசத்தியிருப்பார். இந்த படத்தின் பல காட்சிகள் விசேஷமாக இருந்தது ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.
இந்த படத்தின் அபார வெற்றியை அடுத்து, 2019ம் ஆண்டில் துப்பறிவாளன் 2 படத்தை எடுக்க டைரக்டர் மிஷ்கினும், விஷாலும் முடிவு செய்தனர். இங்கிலாந்தில் துப்பறிவாளன் 2 படப்பிடிப்பு நடந்த கொஞ்ச நாட்களில் விஷாலுக்கும், மிஷ்கினுக்கும் கடுமையான கருத்துவேறுபாடு ஏற்பட்டது. பிறகு படத்தை அப்படியே கிடப்பில் போடப்பட்டது. அதன்பிறகு பொது இடங்களில், பிரஸ்மீட்களில், பட விழாக்களில் விஷாலை, கண்டபடி திட்டிக்கொண்டே இருந்தார் மிஷ்கின்.
இந்நிலையில் துப்பறிவாளன் 2 படத்தை நானே இயக்கப் போகிறேன் என சில ஆண்டுகளுக்கு முன்பே விஷால் அதிரடியாக அறிவித்தார். ஆனால் அதன்பிறகு மற்ற இயக்குநர்களின் படத்தில் நடித்த விஷால், துப்பறிவாளன் 2 படத்தை இயக்க முன்வரவில்லை. இப்போது ஹரி இயக்கத்தில் அவர் நடித்துள்ள ரத்னம் படம் வெளிவர இருக்கிறது. அதன்பின் வரும் 2024 ஏப்ரலில் துப்பறிவாளன் 2 படத்தை துவங்க முடிவு செய்திருக்கிறார் விஷால். அந்த படத்தை முடித்த பிறகுதான் அடுத்த படங்களில் நடிக்க விஷால் திட்டமிட்டுள்ளார்.





