கடந்த சில வாரங்களாக வெளிநாட்டில் இருந்த நடிகர் விஷால், சமீபத்தில்தான் சென்னை திரும்பி இருக்கிறார். கடந்த வாரத்தில் இளம்பெண் ஒருவருடன் நியூயார்க் ரோட்டில் இரவு நேரத்தில் விஷால் நடந்துசெல்லும் வீடியோ வெளியாகி வைரலானது.
இதில் வீடியோ எடுப்பதை பார்த்ததும் விஷால் தலையில் முக்காடு போட்டுக்கொண்டு அருகில் நடந்து வந்த இளம்பெண்ணை இழுத்துக்கொண்டு ஓடுகிறார். அந்த வீடியோ குறித்து அவர் அளித்த விளக்கத்தில். அது விளையாட்டாக செய்தது. உண்மையில் அப்படி எதுவும் பயந்து நான் ஓடவில்லை என்று கூறியிருந்தார்.
இந்நிலையில் நடிகர் விஜயகாந்த் உடல் நலக்குறைவால் காலமான நிலையில் விஷால் நேரில் வரவில்லை. தென்னிந்திய நடிகர் சங்க செயலாளராக அவர் இருந்த நிலையில், நடிகர் சங்கம் சார்பில், முன்னாள் தலைவரான விஜயகாந்துக்கு எந்தவிதமான மரியாதையும் செய்யாதது குறித்து பலரும் விமர்சித்தனர்.
இந்நிலையில் இன்று சென்னை திரும்பிய விஷால், விஜயகாந்த் நினைவிடத்துக்கு சென்று அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து வரும் 19ம் தேதி, தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் மறைந்த நடிகர் விஜயகாந்துக்கு இரங்கல் கூட்டமும் நடத்தப்படும் எனவும் தெரிவித்தார்.
இதற்கிடையே நடிகர் விஜய் மீது செருப்பு வீசியது குறித்த கேள்வி விஷாலிடம் கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த விஷால், தமிழ் திரையுலகம் முன்னேற உதவியாக இருந்தவர் விஜயகாந்த். தன்னுடைய கலை வாழ்க்கை பயணத்திலும் உதவியவர் என்பதால்தான், விஜய் அஞ்சலி செலுத்த நேரில் வந்தார். அவர் மீது இப்படி நடந்தது என்பது மிகவும் தவறான விஷயம்தான். ஆனால் அவ்வளவு பெரிய கூட்டத்தில், இதுபோன்ற விஷயங்களை கட்டுப்படுத்துவது என்பது கடினம் என்று கூறியிருக்கிறார் விஷால்.
நடந்த அந்த மோசமான சம்பவத்துக்கு கண்டனம் தெரிவிக்காமல், இதுபோன்ற கூட்டத்தில் இப்படி நடப்பது என்பது சகஜம்தான் என்பதை தான் விஷால் பூசி மெழுகி கூறியிருக்கிறார். தென்னிந்திய நடிகர் சங்க செயலாளர் என்ற முறையில் விஜய் மீதான இந்த தவறான நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவிப்பதாக அல்லவா விஷால் கூறியிருக்க வேண்டும் என, விஜய் ரசிகர்கள் எதிர்ப்பு குரல் எழுப்பி வருகின்றனர்.





