நடிகர் ரஜினிகாந்தை ரசிகர்கள் தெய்வமாக வைத்துக் கொண்டாடுகின்றனர். சில ரசிகர்கள் மன்றங்களின் பெயர்களே மனித தெய்வம் ரஜினிகாந்த் ரசிகர் மன்றம் என்றுதான் பெயர் வைக்கப்பட்டிருக்கின்றன. கடவுளாக அவரை நினைப்பது ரசிகர்கள் என்றால், தமிழ் சினிமாவி்ல மிக மூத்த நடிகரான ஒருவர், ரஜினியின் புகைப்படத்தை பூஜையறையில் வைத்தே வழிபட்ட தகவல் தற்போது வெளியாகி உள்ளது.
நடிகர் ரஜினிகாந்தை பொருத்த வரை கர்நாடகாவில் இருந்து வந்தவர். கன்னட மொழிக்காரர் என்றெல்லாம் அவர் வளர்ந்து வந்த காலத்தில் பலரும் கடுமையாக விமர்சனம் செய்தது உண்டு. ஆனால், அதை எல்லாம் ரஜினியும் பொருட்படுத்தவில்லை. அவரது ரசிகர்களும் பொருட்படுத்தவில்லை. ஏனெனில் கலைத்துறைக்கு இதுபோன்ற எந்த அடையாளங்களும் இல்லை என்பதுதான்.
துவக்கத்தில் இருந்தே ரஜினி, வாழ்க்கையில் பல கஷ்டங்களை, துன்பங்களை, வறுமையின் சிரமங்களை உணர்ந்தவர் என்பதால், அதுபோன்ற நெருக்கடியான நிலைகளில் இருப்பவர்களுக்கு கண்டிப்பாக உதவுவார். அதிலும் குறிப்பாக திரைத்துறை சார்ந்த பலருக்கும் அதுபோன்ற பல உதவிகளை அவர் செய்திருக்கிறார். இப்போதும் செய்துக்கொண்டு இருக்கிறார்.
சில ஆண்டுகளுக்கு முன், பைரவி என்ற படத்தை தயாரிக்க கலைஞானம், தனது மனைவியின் தாலியை அடகு வைத்து ரஜினிக்கு 5 ஆயிரம் ரூபாய் அட்வான்ஸ் கொடுத்தார். அந்த படத்தில்தான் ரஜினி முதன் முதலாக ஹீரோவாக நடித்தார். கலைஞானத்துக்கு சொந்தமாக வீடு கூட இல்லை என்று ஒரு விழாவில் நடிகர் சிவக்குமார் பேசினார்.
அந்த விழா மேடையில் இருந்த ரஜினி, அடுத்து பேசுகையில், கலைஞானம் விடுகிற கடைசி மூச்சு, அது அவரது சொந்த வீடாக இருக்கும் என்று கூறி அடுத்த சில மாதங்களில் ஒன்றரை கோடி ரூபாய்க்கு அவருக்கு ரஜினி வீடு வாங்கிக் கொடுத்த தகவல் வெளியானது. அப்படிபட்ட உதவும் கொண்டவர்தான் ரஜினி.
அப்படித்தான், சினிமா படங்களை தயாரித்து பலத்த நஷ்டத்தில் இருந்தவர் தமிழ் சினிமாவின் மூத்த நடிகர் விகே ராமசாமி. வறுமையில், கடன் துன்பத்தில் தவித்த விகே ராமசாமியை, தான் நடித்த அருணாச்சலம் படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவராக சேர்த்து, அதில் வந்த லாபத்தில் ஒரு பெரும் பகுதியை விகே ராமசாமிக்கு கொடுத்து உதவியிருக்கிறார் ரஜினி. ஆனால் அருணாசலம் படத்துக்காக ஒரு ரூபாய் கூட விகே ராமசாமி முதலீடு செய்யவில்லை. இதனால் ரஜினி படத்தை தனது பூஜை அறையில் வைத்து கும்பிட்டதாக மறைந்த விகே ராமசாமி ஒரு நேர்காணலில் கூறியிருக்கிறார்.





