மக்கள் திலகம் என்று அழைக்கப்பட்ட புரட்சித் தலைவர் எம்ஜிஆர் உதவி என வருபவர்களுக்கு வாரி வழங்கும் வள்ளல் என்பது தமிழ்நாட்டு மக்கள் அறிந்த விஷயம்தான். நான் அளவோடு ரசிப்பவன் என்ற பாடலை எழுதிய கவிஞர், அடுத்த வரியை எழுத யோசித்த கவிஞரிடம், எதையும் அளவின்றி கொடுப்பவன் என்று எழுதுங்கள் என்று அருகில் இருந்த கருணாநிதியே சொன்னாராம். அப்படி அரசியல் எதிரி கூட எம்ஜிஆரின் கொடை வள்ளல் தனத்தை பாராட்டும் விதமாக வாழ்ந்து காட்டியவர்.
நடிகர் எம்ஜிஆருடன் பல படங்களில் நடித்தவர் விஎஸ் ராகவன். ஆரம்பத்தில் பத்திரிகையாளராக இருந்து பிறகு நாடகங்களில் நடித்து சினிமாவில் நடிகராக மாறியவர். எம்ஜிஆர் சிவாஜி கணேசன் நடித்த பல படங்களில் விஎஸ் ராகவன் முக்கிய கேரக்டர்களில் நடித்திருக்கிறார். வயது 70 80 என கடந்த நிலையிலும் கூட பல படங்களில் அவர் குணச்சித்திர வேடங்களில் நடித்திருந்தார்.
குறிப்பாக இம்சை அரசன் 23ம் புலிகேசி இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம் அறை எண் 305ல் கடவுள் கலகலப்பு இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா நேற்று இன்று நாளை போன்ற சமகால படங்களில் கூட அவரது நடிப்பை வெகுவாக ரசிகர்கள் ரசித்தார்கள். அவரது குரலை மிமிக்ரி கலைஞர்கள் பேசி கைதட்டல் வாங்கி விடுவார்கள். அந்த அளவுக்கு அவரது குரலில் ஒரு தனித்துவம் நிறைந்திருக்கும்.
வைரமாலை என்ற படத்தில் கடந்த 1954ம் ஆண்டில் அறிமுகமான நடிகர் விஎஸ் ராகவன் பிறகு பல படங்களில் நடித்தார். சமய சஞ்சீவி என்ற படத்தை டைரக்ட் செய்திருக்கிறார். காதலிக்க நேரமில்லை உரிமைக்குரல் சிவகாமியின் செல்வன் நீலகிரி எக்ஸ்பிரஸ் இருதுருவம் கர்ணன் என பல படங்களில் விஎஸ் ராகவன் நடிப்பு பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்தது.
ஔிவிளக்கு உள்ளிட்ட பல படங்களில் விஎஸ் ராகவன் எம்ஜிஆருடன் இணைந்து நடித்த நிலையில், எம்ஜிஆர் தமிழக முதலமைச்சர் ஆன நிலையில் விஎஸ் ராகவனுக்கு இயல் இசை நாடக மன்றத்தின் கௌரவ தலைவராக பதவி தந்திருக்கிறார். தனது நெருக்கமானவர்களுக்கு எப்போதுமே ஒரு சிரமம் ஏற்பட்டால் அவர்கள் கேட்காமலேயே உதவுவதுதான் எம்ஜிஆரின் பழக்கம். ஒருமுறை நடிகர் விஎஸ் ராகவனின் அம்மாவுக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டது. இதுபற்றி தகவல் அறிந்த எம்ஜிஆர், தனது உதவியாளர் மூலம் ஒரு பெரும் தொகையை விஎஸ் ராகவனிடம் தருமாறு கொடுத்து அனுப்பி இருக்கிறார்.
ஆனால் அதை வாங்க மறுத்து அந்த உதவியாளரை திருப்பி அனுப்பி விட்டார் விஎஸ் ராகவன். இவ்வளவு நெருக்கமான நட்பு இருந்தும் விஎஸ் ராகவன் தனது உதவியை ஏற்கவில்லையே என எம்ஜிஆர் வருந்தி இருக்கிறார். இதுபற்றி அறிந்த விஎஸ் ராகவன், எனக்கு தேவையான பணம் முதலிலேயே கிடைத்து விட்டதால் உங்கள் பணத்தை மறுத்துவிட்டேன். வேறு யாருக்காவது இது உதவட்டும் என்றுதான் வாங்கவில்லை. எனக்கு ஒரு கஷ்டம் என்றால் உங்களிடம் வராமல், உங்களிடம் கேட்காமல் எங்கே போவேன் என்று எம்ஜிஆரிடம் நேரில் கூறிய பிறகுதான், அவரது நேர்மையை எம்ஜிஆர் பாராட்டி இருக்கிறார்.





