நடிகர் பிரபு மகள் ஐஸ்வர்யா திருமணம் வரும் 15ம் தேதி நடக்க உள்ளது. மார்க் ஆண்டனி படத்தை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன்தான் மாப்பிள்ளை. விக்ரம் பிரபுவின் சகோதரி ஐஸ்வர்யாவை மணம்புரிய இருக்கிறார். இருவரும் காதலித்த நிலையில், இரு தரப்பிலும் பெற்றோர்கள் சம்மதத்துடன் இந்த திருமணம் நடக்க உள்ளது.
ஆதிக் ரவிச்சந்திரன், நேர்கொண்ட பார்வை படத்தில் பணிபுரிந்த போதே அஜீத்குமாரிடம் கதை சொல்லி இருக்கிறார். அதே கேட்டு பாராட்டிய அஜீத், ஒரு நாள் கண்டிப்பாக இருவரும் சேர்ந்து படம் பண்ணுவோம் என்று கூறியிருக்கிறார். இதற்காகவே ஒரு வெற்றிப்படத்தை தர வேண்டிய லட்சியத்தில் ஆதிக் ரவிச்சந்திரன் இருந்திருக்கிறார்.
இந்த சூழலில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கிய மார்க் ஆண்டனி படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. தமிழ்நாட்டில் 100 கோடி ரூபாய் மேல் வசூல் சாதனை புரிந்தது. இதன் சக்சஸ் மீட்டில் உள்ள நடிகர் அஜீத்குமாரை புகழ்ந்து, அவருக்கு இந்த படத்தை சமர்ப்பணம் செய்கிறேன் என்றார் ஆதிக் ரவிச்சந்திரன்.
இப்படி அஜீத்குமாரின் சிஷ்யனாக மாறிய ஆதிக் ரவிச்சந்திரன் மீது அன்பு காட்டிய அஜீத், விடாமுயற்சி படத்துக்கு பிறகு அவருக்கு தனது படம் இயக்கும் வாய்ப்பை அளித்துள்ளார். ஆதிக் ரவிச்சந்திரன் படத்துக்கு பிறகுதான் வெற்றிமாறன் படத்தில் நடிக்கவும் அஜீத்குமார் திட்டமிட்டுள்ளார்.
இந்த நிலையில் வரும் 15ம் தேதி பிரபு மகள் ஐஸ்வர்யாவுக்கும், டைரக்டர் ஆதிக் ரவிச்சந்திரனுக்கும் சென்னையில் திருமணம் நடக்கிறது. இந்த திருமண விழாவில் அஜீத் கட்டாயம் பங்கேற்க வேண்டிய சூழல் உள்ளது. ஏனெனில் பெண் வீட்டார், மணமகன் வீட்டார் இருவருக்குமே மிக முக்கியமான அழைப்பாளராக அஜீத்குமார் இருக்கிறார்.
இரு தினங்களுக்கு முன்புதான், விடாமுயற்சி ஷூட்டிங்கில் பங்கேற்க அஜீத்குமார், தனது மனைவி ஷாலினியுடன் துபாய் சென்றிருக்கிறார். அங்குள்ள அவரது வீட்டுக்குச் சென்றுவிட்டு, பின் அஜர்பைஜானில் நடக்கும் விடாமுயற்சி ஷூட்டிங்கில் பங்கேற்க உள்ளார். இந்நிலையில், சென்னையில் நடக்கும் திருமண விழாவுக்கு அஜீத் வருவாரா என்பது சந்தேகமாக உள்ளது. மேலும், இந்த திருமணத்துக்கு மொத்தமே 300 பேருக்கு மட்டுமே அழைப்பாம். பிரபுவின் மகளுக்கு இது 2வது திருமணம் என்பதால் இந்த ஏற்பாடு என்றும் கூறப்படுகிறது.





