இயக்குனர் தங்கர் பச்சானிடம் சில காலம் உதவியாளராக பணிபுரிந்தவர் ராம். அங்கிருந்து இந்தி திரை உலகிற்கு சென்ற அவர், சிறிது காலம் இயக்குனர் ராஜ்குமார் சந்தோஷியிடம் உதவியாளராக இருந்தார். பின்பு அங்கிருந்து சினிமா கற்றுக் கொண்ட ராம், பாலு மகேந்திராவை தனது ஆசிரியர் ஸ்தானத்தில் வைத்து, அவரின் வழியில் படங்களை எடுப்பதில் ஆர்வம் காட்டினார்.
இந்த நிலையில் இயக்குனர் ராமிற்கு முதல் திரைப்படமாக கற்றது தமிழ் அமைந்தது. 2006 ஆம் ஆண்டு வெளியான இந்த திரைப்படம், நடிகர் ஜீவாவிற்கு மிகப்பெரிய உச்சத்தை கொடுத்தது. தமிழ் படித்து விட்டு, சமூகத்தில் பலராலும் விமர்சிக்கப்படும் ஒரு இளைஞரின் வாழ்க்கையை மிக அழகாக காட்சிப்படுத்தியிருந்தார் இயக்குனர் ராம். நடிகை அஞ்சலிக்கும் இந்த திரைப்படம், மிகப்பெரிய அளவில் பாராட்டை கொடுத்தது.
யுவன் சங்கர் ராஜா இசையில் கற்றது தமிழில் அனைத்து பாடல்களும் ஹிட் ஆக, இயக்குனர் ராமை பலரும் பாராட்டினர். விமர்சன ரீதியாக மிகப்பெரிய வரவேற்பு பெற்ற அந்த திரைப்படம், வசூலில் அன்றைய தேதியில் படு தோல்வியை சந்தித்தது. ஆனால் இப்போதும் அந்த திரைப்படத்திற்கு என தனி ரசிகர்கள் இருக்கிறார்கள் என்று கூறலாம்.
இதன் பிறகு கிட்டத்தட்ட ஏழு ஆண்டுகள் கழித்து, தங்கமீன்கள் திரைப்படத்தை இயக்கினார் ராம். அப்பா மகள் உறவை இதற்கு முன்பு எத்தனையோ திரைப்படங்கள் கூறி இருந்தாலும், அது தங்க மீன்கள் அருகே கூட வர முடியாது என்று கூறலாம். அந்த அளவுக்கு மிகவும் யதார்த்தமாக எழுதப்பட்டிருந்தது இதன் திரைக்கதை. நா முத்துக்குமாரின் வரியில் ஆனந்த யாழை மீட்டுகிறாய் பாடல் தேசிய விருதையும் பெற்றது.
இரண்டு திரைப்படங்களின் மூலம் புகழின் உச்சிக்கு சென்ற ராம், அடுத்ததாக தரமணி திரைப்படத்தை இயக்கினார். ஆண்ட்ரியா வசந்த் ரவி நடிப்பில் வெளியான இந்தத் திரைப்படம் ராமிற்கு முதல் முறையாக விமர்சன ரீதியாகவும் கல்லா கட்டிய திரைப்படமாக அது அமைந்தது. இதன் பிறகு, மலையாள நடிகர் மம்முட்டியை வைத்து, பேரன்பு திரைப்படத்தை அவர் இயக்கினார்.
சர்வதேச திரைப்பட திருவிழாவில் கொண்டாடப்பட்ட பேரன்பு திரைப்படம் திரையரங்குகளில் மட்டும் ஏனோ கவனம் ஈர்க்கத் தவறியது. இந்த நிலையில் தற்போது அவர் நிவின் பாலி சூரி அஞ்சலி ஆகியோரை வைத்து ஏழு கடல் ஏழுமலை திரைப்படத்தை இயக்கியுள்ளார். காதல் திரைப்படமாக உருவாகி இருக்கும் இது, சர்வதேச திரைப்பட விழாவில் பங்கேற்றது. தற்போது இந்த படத்தில் இருந்து வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது. அதன் காட்சிகள் நன்றாக இருந்தாலும் கற்றது தமிழ் படத்தை நினைவுபடுத்துவதாக பலரும் கமெண்ட் அடித்து வருகின்றனர். இருப்பினும், இது திரைப்படத்தின் மேல் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.





