யோகி பாபு தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகராக வலம் வருகிறார். தொடக்கத்தில் சின்ன சின்ன காமெடி வேடங்களில் நடித்து வந்த யோகி பாபு, ஒரு கட்டத்திற்கு பிறகு வடிவேலு, விவேக், சந்தானம் ஆகியோரை போல் ஒரு முக்கிய காமெடி நடிகராக உருவாகி தனி டிராக்கில் பயணித்து வருகிறார். சமீப காலமாக ரஜினிகாந்த், விஜய், அஜித் போன்ற டாப் நடிகர்களின் திரைப்படங்களில் யோகி பாபு காமெடியனாக நடித்து வருகிறார். அதையும் தாண்டி கதாநாயகனாகவும் பல திரைப்படங்களில் நடித்து வருகிறார். இரண்டு தேசிய விருதுகளை குவித்த “மண்டேலா” திரைப்படத்தை இதற்கு உதாரணமாக கூறலாம்.

இவ்வாறு ஒரு தவிர்க்கமுடியாத நடிகராக யோகி பாபு வளர்ச்சியடைந்துள்ளார். யோகி பாபு நடித்ததில் மிகவும் முக்கியமான திரைப்படங்கள் பல இருந்தாலும், “லவ் டுடே” திரைப்படத்தில் அவரது கதாபாத்திரம் ரசிகர்களை கவரும் கதாபாத்திரமாக அமைந்தது.
தன்னுடைய உருவத்தை குறித்த தாழ்வு மனப்பான்மை அந்த கதாபாத்திரத்திற்கு இருக்கும். அவர் உருவத்தை வாட்ஸ் அப் குரூப்பில் பலர் கேலி செய்வார்கள். அது தனது வருங்கால மனைவிக்கு தெரிய கூடாது என்பதால் தனது மொபைலை அவருக்கு தரமாட்டார். இந்த உண்மையை யோகி பாபு வெளிப்படுத்தும் தருணம் பார்வையாளர்களுக்கு கண்ணீர் வரவழைக்கும். அந்தளவுக்கு அந்த காட்சியை உருக்கமாக படமாக்கியிருப்பார்கள்.

இந்த காட்சிக்காக டப்பிங் பேசும்போது யோகி பாபுவால் உணர்ச்சிவசத்தை கட்டுப்படுத்த முடியவில்லையாம். “இது போன்ற கேலிகள் எல்லாம் என் வாழ்க்கையில் நடந்திருக்கிறது. எனக்கு ஒரு மாதிரியாக இருக்கிறது. நான் நாளைக்கு வந்து பேசுகிறேன்” என்று கூறி சென்றுவிட்டாராம். அதற்கு அடுத்த நாளும் அவரால் டப்பிங் பேசமுடியவில்லையாம். எனினும் ஒரு வழியாக தன்னுடைய எமோஷனலை கட்டுப்படுத்தி டப்பிங் பேசி முடித்தாராம்.





