இயக்குனர் மோகன் ராஜா இயக்கத்தில் ஜெயம் படம் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் அவரது தம்பி ரவி. இந்த படம் பெரிய வெற்றியை பெற்றதால் ஜெயம் ரவி என அழைக்கப்பட்டார். நடிகை சதா தமிழில் அறிமுகமான முதல் படமும் இதுதான். அடுத்து எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி படமும் மாஸ் ஹிட் படமாக ஜெயம் ரவிக்கு அமைந்தது.
சந்தோஷ் சுப்ரமணியம் உனக்கும் எனக்கும் தனி ஒருவன் போகன் அடங்க மறு நிமிர்ந்து நில் வனமகன் பேராண்மை என பல வெற்றிப் படங்களை கொடுத்த ஜெயம் ரவிக்கு ஒரு கட்டத்தில் அவர் நடித்த படங்கள் தொடர்ந்து படுதோல்வியை சந்தித்தன.
குறிப்பாக பூமி அகிலன் இறைவன் சைரன் 108 பிரதர் என அடுத்தடுத்த படங்கள் தோல்வியை சந்தித்தன. சமிீபத்தில் கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் ஜெயம் ரவி நித்யாமேனன் நடித்த காதலிக்க நேரமில்லை படமும் எதிர்பார்த்த அளவுக்கு ஓடவில்லை. இந்த சூழலில் ஜெயம் ரவி தனது பெயரை ரவி மோகன் எனவும் மாற்றிக் கொண்டார்.
மேலும் தனது காதல் மனைவி ஆர்த்தியை பிரிவதாகவும் கடந்தாண்டில் அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார். தனது பிறந்த நாளில் குடும்ப நல நீதிமன்றத்தில் விவாகரத்து கேட்டு மனுதாக்கலும் செய்தார். இப்போது இவர்களது விவாகரத்து வழக்கு விசாரணை கோர்ட்டில் நடந்து வருகிறது.
தொடர்ந்து படங்களில் நடித்து தோல்வியை சந்தித்து வரும் நடிகர் ரவி மோகன் இப்போது இயக்குனராக களத்தில் இறங்க தயாராகி விட்டார். ஏற்கனவே அவர் ரவி மோகன் ஸ்டுடியோஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தையும் துவங்கி இருக்கிறார். இவரது அண்ணன் மோகன் ராஜா இயக்குனராக உள்ளார். ஜெயம் எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி தனி ஒருவன் போன்ற படங்களை டைரக்ட் செய்தது அவர்தான்.
அதே பாணியில் அண்ணனை போலவே நடிகர் ரவி மோகனும் இப்போது இயக்குனராக களத்தில் குதித்து விட தயாராகி விட்டார். இவர் இயக்கும் முதல் படத்தில் நாயகனாக நடிக்கப் போவது காமெடி நடிகர் யோகிபாபுதான். அவர் இப்போது சில படங்களில் பிஸியாக நடித்து வருவதால், இன்னும் சில மாதங்களில் அதை முடித்த பிறகு நடிகர் ரவிமோகன் இயக்கும் முதல் படத்தில் யோகிபாபு நாயகனாக நடிக்கிறார். இயக்குனராக ரவி மோகன் ஜெயிப்பாரா, என்பதற்கு காலம்தான் பதில் சொல்லும்.





