இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் வெளிவரும் படங்கள் என்றாலே ரசிகர்கள் மத்தியில் தனிப்பட்ட கவனமும், வரவேற்பும் எப்போதுமே இருந்து வருகிறது. ஏனெனில் இந்திய சினிமா இயக்குனர்களில் ஒருவராக மணிரத்னம் கவனிக்கப்படுகிறார். அவரது படங்கள், தனித்துவம் மிக்கதாகவும் வேறுபட்ட கதைக்களமாகவும் இருந்து வருகின்றன.
ஆனால் அதே நேரத்தில் சில படங்கள், அவரது இயக்கத்தில் ரசிகர்களுக்கு பலத்த ஏமாற்றத்தையும் தந்திருக்கின்றன என்பதையும் மறுப்பதற்கில்லை. உதாரணமாக பொன்னியின் செல்வன் முதல் பாகத்தை சிறப்பாக கொடுத்த மணிரத்னம், 2ம் பாகத்தில் கதையின் முடிவை மாற்றி, சினிமாத்தனமான ஒரு கிளைமாக்ஸை தந்ததை ரசிகர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
அதுதான் பொன்னியின் செல்வன் 2ம் பாகத்தின் மிக மோசமான தோல்விக்கு காரணமாக அமைந்தது. மக்கள் ஏற்கனவே அறிந்த ஒரு கதையை படமாக்கும்போது, அதை விஷூவலாக இன்னும் சுவாரசியப்படுத்தி தந்தால் மட்டுமே, ரசிகர்களிடம் வரவேற்பை பெறும். அப்படியின்றி சினிமாத்தனமாக அதை மாற்றினால், அதன் தன்மையே கெட்டுப்போகும் என்பதற்கு பொன்னியின் செல்வன் உதாரணமாகி விட்டது.
அதனால் பொன்னியின் செல்வன் 2ம் பாகத்தில் ரசிகர்களை திருப்திபடுத்தாத இயக்குனர் மணிரத்னம், கமல்ஹாசன், சிம்பு இணைந்து நடிக்கும் தக்லைப் படத்தில் ரசிகர்களை குதூகலிக்க வைக்கும் விதமாக மிக சிறப்பான ஒரு படத்தை தருவார் என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் காத்திருக்கின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக 4 மாதங்களுக்கு மேலாக நடந்து வருகிறது.
இந்த படத்தில் துவக்கத்தில் நயன்தாரா நடிக்கிறார் என்று கூறப்பட்டது. பிறகு திரிஷா, அபிராமி நடிப்பதாக தெரிய வந்தது. அதன்பிறகு துல்கர் சல்மான், ஜெயம் ரவி ஆகியோர் நடிக்க கமிட் ஆன நிலையில், அவர்களுக்கான கேரக்டர், சம்பளம் குறித்த விவரங்களை தராத மணிரத்னம். ஒரு கட்டத்தில் கொடுத்த கால்ஷீட்டுகளையும் பயன்படுத்திக் கொள்ளாமல் நிராகரித்தார்.
இதனால் வெறுத்துப்போன துல்கர் சல்மானும், ஜெயம் ரவியும் ஒரு கட்டத்தில் இந்த படத்தில் இருந்து வெளியேறி விட்டனர். அதன்பிறகு அவர்கள் இல்லாமல் தக்லைப் கதையை வேறு மாதிரி மாற்றியமைத்து, கமல் மற்றும் சிம்புவுக்கு முக்கியத்துவம் தரும் வகையில் இந்த படத்தை உருவாக்கி இருக்கிறார். இந்த படத்தில் இப்போது முக்கிய கேரக்டர் ஒன்றில் இளம் நடிகர் அசோக் செல்வன் நடிப்பது உறுதியாகி விட்டது. இப்போது நடந்து வரும் ஷூட்டிங்கில் அவர் பங்கேற்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.





