இயக்குனர் வெற்றிமாறன், இந்திய சினிமாவில் அடையாளம் பெற்ற ஒரு முன்னணி இயக்குனராக, முக்கியத்துவம் பெற்ற கவனிக்கப்படும் இயக்குனராக இருந்து வருகிறார். அவரது படங்கள் இந்திய சினிமா அளவில் மிகப்பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றன.
பொல்லாதவன் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான வெற்றிமாறன் தொடர்ந்து ஆடுகளம், வடசென்னை, அசுரன், விடுதலை போன்ற படங்களை தந்து தனது படைப்பு திறமையை வெளிப்படுத்தி வருகிறார். ஹீரோக்களை நம்பி படம் எடுக்கும் இன்றைய கமர்ஷியல் இயக்குனர்களுக்கு மத்தியில், கதையை நம்பி படம் எடுக்கும் முக்கிய இயக்குனராக, ஒரு படைப்பாளியாக தன்னை முன்னிறுத்தி வருபவர் இயக்குனர் வெற்றிமாறன்.
காமெடி நடிகர் சூரியை ஒரு அற்புதமான நடிகராக, விடுதலை படத்தில் குமரேசன் என்ற கான்ஸ்டபிள் கேரக்டரில் ஆக நடிக்க வைத்து ரசிகர்களை அசத்தியவர் வெற்றிமாறன். ஆடுகளம் படத்தில் சேவல் சண்டையை மையமாக வைத்து அப்படி ஒரு மிகச்சிறந்த படத்தை ரசிகர்களுக்கு தந்திருந்தார். அதேபோல் வடசென்னை, அசுரன் போன்ற படங்களையும் குறிப்பிட்டுச் செல்லலாம். அதிலும் விடுதலை படத்தின் விஜய் சேதுபதியை வாத்தியார் பெருமாள் கேரக்டரில் அவர் கொண்டு சென்ற விதம், ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்றது.
இப்போது விடுதலை 2 படத்தை இயக்கி வரும் வெற்றிமாறன், அடுத்து வாடிவாசல் படத்தை துவங்க இருக்கிறார். அந்த படத்தை தொடர்ந்து நடிகர் ராகவா லாரன்ஸ் நடிக்கும் அதிகாரம் என்ற புதிய படத்தை வெற்றிமாறன் இயக்குகிறார். இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள நடிகர் ராகவா லாரன்ஸ், இயக்குனர் வெற்றிமாறனுடன் இணைந்து பணி புரிவது குறித்தும், தனது புதிய படத்துக்கு பெயர் வைத்தது குறித்தும் எக்ஸ் பக்கத்தில் பின்வருமாறு பதிவு செய்துள்ளார்.
வணக்கம் நண்பர்களே மற்றும் ரசிகர்களே, வெற்றி மாறன் சார், அதிகாரத்தின் படப்பிடிப்பு ஸ்கிரிப்டைப் பற்றி கூறியதைக் கேட்டு நான் மிகவும் மகிழ்ச்சியடைந்தேன். வெற்றி மாறன் சார் எழுதிய ஒரு பிரமாண்டமான படத்தில் பணிபுரியும் வாய்ப்பு கிடைத்ததில் நான் மிகவும் மகிழ்ச்சியாகவும் உற்சாகமாகவும் இருக்கிறேன்.
நான் முன்பு அறிவித்த இரண்டு திட்டங்களுக்குப் பிறகு இந்த திட்டத்தில் வேலை செய்ய நான் காத்திருக்கிறேன். இந்த அற்புதமான திரைக்கதையை எனக்கு வழங்கிய வெற்றி மாறன் சாருக்கு எனது மனமார்ந்த நன்றிகள், இது காத்திருப்புக்கு மதிப்பானது மற்றும் தயாரிப்பாளருக்கு நன்றி சொல்ல விரும்புகிறேன் என்று அந்த பதிவில் தன் சந்தோஷத்தை ராகவா லாரன்ஸ் வெளிப்படுத்தி இருக்கிறார்.





