தமிழ் சினிமாவில் காமெடி நடிப்பில் முன்னணி நட்சத்திரமாக இருந்து வருபவர் யோகி பாபு. விஜய் டிவியில் லொள்ளு சபா காமெடி நிகழ்ச்சியில் துணை பாத்திரங்களில், கூட்டத்தில் ஒருவராக நின்று கொண்டிருப்பார். அதன்பிறகு சினிமாவில் நடிக்க ஆசைப்பட்டு, பல திரைப்பட நிறுவனங்களின் படியேறி இறங்கி வாய்ப்பு கேட்டார்.
அவரது வித்தியாசமான தோற்றத்தை பார்த்து ஒரு சில படங்களில் சில காட்சிகள் நடிக்க, சில இயக்குனர்கள் யோகி பாபுவுக்கு வாய்ப்பளித்தனர். அந்த வகையில் அவர் அடிக்கடி சினிமாவில் சில காட்சிகளில் நடித்த வகையில், சில படங்களில் அவருக்கு வசனங்களும் தரப்பட்டன.
இந்த சூழ்நிலையில் நடிகர் வடிவேலு சினிமாவில் நடிக்காமல் இடைவெளி விட்டிருந்தார். மேலும் காமெடியாக நடித்துக் கொண்டிருந்த நடிகர் சந்தானமும், நடிகர் சூரியும் ஹீரோவாக நடிக்க போய் விட்டனர். இந்த நேரத்தில் யோகி பாபு ஒரு சில படங்களில் சின்ன சின்ன கேரக்டர்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.
கிடைத்த கேரக்டர்களில் நல்ல நடிப்பை வெளிப்படுத்தி, அவர் காமெடி நடிகராக வலம்வர ஆரம்பித்தார். அவரது நடிப்புக்கேற்ப நல்ல டயலாக் சில படங்களில் அமைந்து அவருக்கு பெரிய அளவில் ரசிகர்கள் மத்தியில் கவனத்தைப் பெற்று தந்தது. குறிப்பாக காக்கா முட்டை படத்தில், எனக்கு விபூதி அடிக்க பார்த்தியா நீ என்று வசனம் பேசி இருப்பார்.
அதேபோல் சில படங்களில் நடித்த யோகி பாபு, ஒரு கட்டத்தில் ரஜினிகாந்த், சிவகார்த்திகேயன், தனுஷ், ஜெயம் ரவி போன்ற முன்னணியின் நடிகர்கள் படங்களில் காமெடி ரோலில் நடிக்க ஆரம்பித்தார். அவரது காட்சிகளில் சிரிப்பு இல்லாமல் போனாலும், படத்தில் இருப்பது ஏதேனும் ஒரு விதத்தில் ரசிகர்களை கவரும் விதமாக இருக்கிறது. மண்டேலா, கூர்க்கா, எமதர்ம பிரபு போன்ற படங்களில் நாயகனாகவும் நடித்திருந்தார். கோலமாவு கோகிலா, கோமாளி, மாவீரன், லவ்டுடே, டாக்டர் என பல படங்களில் காமெடியில் யோகி பாபு அசத்தியிருந்தார்.
சமீபத்தில் ஒரு மேடையில் பேசிய நடிகர் யோகி பாபு, ஒரு படத்தில் பாடல் காட்சியில் நான் டான்ஸ் ஆடினேன். அந்த பாடலை இரவு நேரத்தில் ஷூட்டிங் எடுத்தார்கள். என்னால் சரியாக டான்ஸ் ஆட முடியவில்லை. அப்போது எனக்கு பின்னால் இருந்த ஒரு துணை நடன நடிகை, எனக்கு நெஞ்சே வலிக்குது. இவன் வேற சரியா ஆடித் தொலைக்க மாட்டேங்குறான் என்று என் காதுபடவே சத்தமாக புலம்பினார். அப்போதுதான் நான் முடிவு செய்தேன். இனிமேல் யாரையும் நாம் கஷ்டப்படுத்தக் கூடாது. அதில் இருந்து நான் நடிக்கும் படங்களில் பாடலில் டான்ஸ் ஆடுவது இல்லை என்று வெளிப்படையாக பேசி இருக்கிறார் நடிகர் யோகி பாபு.





