தமிழ்நாட்டில் கட் அவுட்டுகள், பேனர்களுக்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது. இருப்பினும் அரசின் விதிமுறை மீறி பேனர்கள் அதிகளவில் வைக்கப்படுகின்றன. குறிப்பாக அரசியல் கட்சிகள், வர்த்தக நிறுவனங்கள் இந்த விதிமீறலை செய்து வருகின்றன. எனினும் தமிழ்நாட்டில் கட் அவுட் கலாசாரம் முன்பை விட இப்போது வெகுவாக குறைந்துவிட்டது.
ஆந்திராவை அடுத்துள்ள தெலங்கானாவில் இப்போதுதான் ஒரு மிகப்பெரிய பிரச்னை வெடித்தது, அல்லு அர்ஜூன் போலீஸ் ஸ்டேஷன் கோர்ட் என்று இப்போது அலைந்துக்கொண்டு இருக்கிறார். புஷ்பா 2 படம் பிரிமியர் ஷோவுக்கு வந்த ரேவதி என்ற பெண் நெரிசலில் சிக்கி உயிரிழந்தார்.
இந்த சம்பவத்தில் கைது செய்யப்பட்ட அல்லு அர்ஜூன் ஜாமினில் வெளிவந்துள்ளார். எனினும் அவரது ஜாமினை ரத்து செய்யக்கோரி, சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்ய ஐதராபாத் போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்த விஷயத்தில் கடும் கோபத்தில் உள்ள தெலங்கானா அரசு, சிறப்பு காட்சிகளுக்கு இனி அனுமதி இல்லை என ரத்து செய்துவிட்டது.
இந்த சூழலில் இப்போது நடிகர் ராம்சரண், கியாரா அத்வானி எஸ்ஜே சூர்யா நடித்த கேம் சேஞ்சர் படம் வருகிற ஜனவரி 10ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது. தெலுங்கு தமிழ் கன்னடம் மலையாளம் இந்தி என பான் இந்தியா மொழி படமாக இந்த படத்தை ஷங்கர் இயக்கி உள்ளார். தில் ராஜூ படத்தை பிரமாண்டமாக தயாரித்துள்ளார்.
கேம் சேஞ்சர் படத்தின் பிரமோசன் நிகழ்ச்சிக்காக நாளை விஜயவாடாவில் 250 அடி உயரத்தில் படத்தின் நாயகன் ராம் சரண் கட் அவுட் வைக்கப்படுகிறது. அந்த கட் அவுட்டுக்கு ஹெலிகாப்டரில் இருந்து பூக்களை தூவவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக 9 லட்சம் ரூபாய் வரை செலவு செய்யப்பட்டுள்ளது. 25 நாட்களாக கட் அவுட் அமைக்கும் பணி வேகமாக நடந்துள்ளது. நாளை நடக்கும் திறப்பு விழா நிகழ்ச்சியில் ராம்சரண், தில் ராஜூ உள்ளிட்டோரும் பங்கேற்க உள்ளனர்.
இதற்கு முன் சலார் படத்துக்காக பிரபாஸூக்கு 230 அடியில் கட் அவுட் வைத்த நிலையில், ராம் சரணுக்கு 250 அடி உயரத்தில் கட் அவுட் வைத்துள்ளனர். இப்போதுதான் புஷ்பா 2 படம் பார்க்க வந்த பெண் நெரிசலில் சிக்கி உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. 250 அடி உயரத்தில் வைக்கப்படும் கட் அவுட் சரிந்தால், அதனால் ஏற்படும் பாதிப்பு பலமாக இருக்கும். இதற்கு அரசு அனுமதி வழங்கியிருப்பதுதான் வேடிக்கையின் உச்சமாக உள்ளது.





