கமர்ஷியல் என்ற பெயரில் 100 கோடி ரூபாய் முதல் 300 கோடி ரூபாய் வரை செலவு செய்து எடுக்கப்படும் படங்கள் பலவும் பிளாப் ஆகி விடுகின்றன. பெரிய ஹீரோக்கள் பெரிய இயக்குனர்கள் பெரிய தயாரிப்பு நிறுவனம் பெரிய பட்ஜெட் என பெருமை பேசும் படங்கள் பலவும் தோல்வி அடைவது சகஜமாகி விட்டது.
உதாரணமாக இந்தியன் 2 கங்குவா தக்லைஃப் விடாமுயற்சி டிடி நெக்ஸ்ட் லெவல் கேங்கர்ஸ் குபேரா என சமீபத்திய பல படங்கள் எதிர்பார்த்த வெற்றியை பெறாமல் பலத்த ஏமாற்றத்தை தந்தன. அதே நேரத்தில் குடும்பஸ்தன் மதகஜராஜா டூரிஸ்ட் பேமிலி மெய்யழகன் டூரிஸ்ட் ஃபேமிலி என சின்ன பட்ஜெட் பலவும் ஜெயித்து காட்டியிருக்கின்றன.
கமர்ஷியல் என்ற பெயரில் வெறும் பில்டப் காட்சிகளை வைத்து மட்டுமே ரசிகர்களை ஏமாற்ற முடியாது. நல்ல கதை இருந்தால் மட்டுமே அந்த படம் ரசிகர்களிடம் ஜெயிக்கும் என்பதை தமிழ் சினிமா ரசிகர்கள் மீண்டும் மீண்டும் நிரூபனம் செய்துக்கொண்டே இருக்கிறார்கள். ஆனால் இன்னும் சில நடிகர்கள் இயக்குனர்கள் திருந்தாமல் கமர்ஷியல் குப்பைகளை படமாக்கி கொண்டே இருக்கின்றனர்.
இந்நிலையில் சமீபத்தில் திரைக்கு வந்துள்ள படம் 3 பிஹெச்கே. சரத்குமார் தேவயானி சித்தார்த் யோகிபாபு உள்ளிட்டோர் முக்கிய கேரக்டர்களில் இந்த படத்தில் நடித்திருக்கிறார். எட்டு தோட்டாக்கள் குருதி ஆட்டம் படங்களை இயக்கிய இயக்குனர் ஸ்ரீ கணேஷ் இயக்கிய 3வது படம்தான் 3 பிஹெச்கே. இந்த படம் வெளியாகி 3 நாட்கள் ஆன நிலையில் படத்துக்கு பாசிட்டிவ் விமர்சனங்கள் கிடைத்து வருகின்றன.
வாடகை வீட்டில் பல ஆண்டுகளாக வசிப்பவர்கள், குறிப்பாக நடுத்தர பொருளாதார வாழ்க்கை வாழும் மிடில் கிளாஸ் பேமிலியில் எப்படியாவது சொந்த வீடு கட்ட வேண்டும். தங்களது பிள்ளைகளுக்கு எதிர்காலத்தில் சொந்த வீடு விட்டுச் செல்ல வேண்டும். அந்த கனவு இல்லம் எப்படி இருக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். அதை மையப்படுத்திய கதைக்களத்தில் 3 பிஹெச்கே படம் உருவாகி உள்ளது.
சூரியவம்சம் மூவேந்தர் படங்களுக்கு பிறகு 28 ஆண்டுகள் கழித்து மீண்டும் சரத்குமார், தேவயானி இருவரும் இந்த படத்தில் இணைந்து நடித்திருக்கின்றனர். இந்த படத்துக்கு பாசிட்டிவ் விமர்சனங்கள் இருந்தாலும் எதிர்பார்த்த அளவுக்கு வசூல் இதுவரை இல்லாததால் ஊர் ஊராக தியேட்டர்களுக்கு சென்று படத்தை பிரமோஷன் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளது. கடந்த 3 நாட்களில் இந்த படத்தின் மொத்த வசூல் உலகளவில் 4.8 கோடி ரூபாய் என பாக்ஸ் ஆபிஸ் நிலவரங்கள் தெரிவிக்கின்றன.





