நடிகர் விஜய்க்கு அவர் செல்லும் இடம் எல்லாம் மக்கள் கூட்டம் அலை கடலாக திரண்டு விடுகிறது. அப்படிப்பட்ட சூழலில் விஜய் நடத்திய விக்கிரவாண்டி மதுரை மாநாடு கூட்டங்களிலும், கடந்த 2 வாரங்களாக மேற்கொண்ட மக்கள் சந்திப்பு பயண கூட்டங்களிலும் மக்கள் கூட்டம் கட்டுக்கடங்காமல் இருப்பதை விஜய் மற்றும் தவெக கட்சியின் மாநில பொறுப்புகளில் உள்ள கட்சி நிர்வாகிகளும் நேரடியாக பார்த்துள்ளனர்.
இந்நிலையில் விஜய் வாரம் ஒருநாள் சனிக்கிழமை மட்டுமே மக்கள் சந்திப்பு பிரசாரம் மாவட்டம் வாரியாக மேற்கொள்கிறார். அப்படி அவர் வரும்போது போலீஸ் அனுமதி தரும் நேரத்துக்குள் போலீஸ் அனுமதி தந்த இடத்துக்கு வருவதில்லை. காரணம் அவர் பிரசார வாகனத்தில் வரும் வழிநெடுகிலும் மக்கள் கூட்டம் திரண்டு விடுகிறது. பிரசார வாகனம் நகர வழியிருப்பதில்லை. 4 மணி 5 மணி நேரத்துக்கு மேல் அதனால் தாமதம் ஏற்படுகிறது.
அதே போல் விஜய் சனிக்கிழமை காலையில்தான் சென்னையில் உள்ள தனது நீலாங்கரை பங்களாவில் இருந்தே கிளம்புகிறார். தனி விமானம் வழியாக திருச்சி போன்ற நகரத்துக்கு வந்து சேருகிறார். பிறகு அங்கிருந்து காரில் அல்லது பிரசார வாகனத்தில் குறிப்பிட்ட மாவட்டத்துக்கு பயணம் மேற்கொள்கிறார். இப்படிதான் இவரது பயணத்திட்டம் இதுவரை இருந்து வருகிறது.
இப்படி அவர் வருவதால்தான் ஒவ்வொரு சனிக்கிழமையும் அவர் வரும்போது கூட்டம் அலைமோதுகிறது. மக்கள் வெள்ளத்தில் குறிப்பிட்ட அந்த பகுதியே நிரம்பி வழிகிறது. ஆனால் இதுபோன்ற கூட்ட நெரிசலில் மக்கள் சிக்கினால் பேராபத்து ஏற்படுமே, மக்கள் உயிர்க்கு ஆபத்து வருமே என்று தவெக நிர்வாகிகள் கட்சியின் தலைவர் விஜய் உட்பட யாருமே கவலைப்பட்டதாக தெரியவில்லை. பல மணி நேரம் மக்களை நெரிசலை காத்திருக்க வைத்ததன் விளைவு இன்று கரூரில் கொடிய சம்பவம் அரங்கேறி 36 உயிர்களை பழிவாங்கி விட்டது.
விஜய் குறிப்பிட்ட மாவட்டத்துக்கு பிரசாரம் செல்ல முந்தைய நாள் இரவே கட்சி முக்கிய நிர்வாகிகளுடன் குறிப்பிட்ட மாவட்ட தலைநகருக்கு வந்து தனியார் விடுதியில் அல்லது கட்சி நிர்வாகி வீட்டில் தங்கியிருக்கலாம். மறுநாள் காலை 10 மணிக்குள் காரில் சென்று குறிப்பிட்ட மாவட்ட தலைநகரில் ஏற்கனவே அங்கு தயாராக இருக்கும் பிரசார வாகனத்தில் ஏறி பேசியிருக்கலாம். பிறகு அங்கிருந்து மீண்டும் காரில் சென்று தனக்கு முன்னதாக பிரசார வாகனத்தை அங்கு அனுப்பி வைத்து, அந்த ஊரிலும் சென்று பிரசார வாகனத்தில் ஏறி பேசிவிட்டு செல்லலாம். இதுதான் சரியான நடைமுறையாக இருக்கும்.
இப்படி காரில் அவர் செல்வதால் வழிநெடுக மக்கள் கூட்டம் ரோட்டில் திரளாது. கூட்டத்துக்கு தாமதமும் ஆகாது. முக்கிய மாவட்டத்தில் பொதுக்கூட்டத்திலும் மக்கள் அவரது வருகைக்காக மணிக்கணக்கில் காத்திருக்க வேண்டிய அவசியமில்லை.மேலும் அதிக கூட்டமும் சேராது. ஆனால் தனது மக்கள் செல்வாக்கை காட்ட நடிகர் விஜய் மற்றும் தவெக நிர்வாகிகள் செய்த குளறுபடியான நிர்வாகம்தான் இந்த கரூர் கூட்ட நெரிசலில் 36 உயிர்களை பலி வாங்கியுள்ளது. தன்னை காண்பதற்காக பல மணி நேரம் உணவு தண்ணீர் இல்லாமல் மக்கள் கால்கடுக்க காத்திருப்பார்களே என்ற மனிதநேயம் நடிகர் விஜய்க்கு இருந்திருந்தால் இந்த அசம்பாவிதமே நடந்திருக்காது என்பதுதான் கசப்பான உண்மை.





