கன்னடத்தில் பலத்த வரவேற்பை பெற்ற காந்தாரா படம், அடுத்து தமிழ், இந்தி, தெலுங்கு மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது. கன்னடத்தை போல, பிற மொழிகளிலும் இந்த படத்தை ரசிகர்கள் வரவேற்று கொண்டாடி மகிழ்ந்தனர். குறிப்பாக ரிஷப் ஷெட்டியின் அந்த தெய்வாதீன நடிப்பு, ரசிகர்களை வெகுவாக கவர்ந்து விட்டது.
கடந்த 18ம் நூற்றாண்டில் நடந்த நிலச்சுவான்தாரர் கதையாக இது இருந்தது. கடவுள் நம்பிக்கை கொண்ட ராஜா, ஒரு குறிப்பிட்ட மலைவாழ் மக்களுக்கு தனது நிலத்தை தானமாக வழங்குகிறார். அவருக்கு பின் வரும் வாரிசுகள், அந்த பூர்வீக நிலத்தை தங்களுடையதாக்க முயற்சிக்கின்றனர். அதை தெய்வ சக்தியாக வெளிப்பட்டு, முறியபடிப்பதுதான் இந்த கதை.
மிக குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த படம் 400 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் சாதனை புரிந்தது. ஆஸ்கர் விருதுக்கு இந்த படம் சிறந்த நடிகர், சிறந்த படம் ஆகிய இரண்டு பிரிவுகளுக்கும் பரிந்துரை செய்யப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் 2ம் பாகம் எப்போது வரும் என, தொடர்ந்து அந்த படத்தின் இயக்குநர், நடிகர் ரிஷப் ஷெட்டியிடம் ரசிகர்கள் கேட்டுக்கொண்டு இருந்தனர்.
இந்நிலையில், காந்தாரா சேப்டர் 1 படத்தின் அடுத்த பாகம் வெளிவர இருப்பதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் முதலில் படப்பிடிப்பை துவங்கும் காந்தாரா படக்குழு அடுத்து, உடுப்பியில் 2ம் கட்ட படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டுள்ளது. இதையடுத்து, மங்களூருவில் பிரமாண்டமான செட் அமைத்து, படப்பிடிப்பு நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.
சமீபத்தில் இந்த காந்தாரா சேப்டர் 1ன் பர்ஸ்ட் லுக் மற்றும் டீசரை படக்குழுவினர் வெளியிட்டனர். மிரட்டலான அந்த டீசர், படம் வேற லெவலில் இருக்கும் என்பதை உறுதிபடுத்துகிறது. இந்த படத்தை துவக்கத்திலேயே தமிழ், கன்னடம், தெலுங்கு மற்றும் இந்தி என நான்கு மொழிகளிலும் ரீமேக் செய்து ஒரே நேரத்தில்தான் வெளியிட படக்குழு தரப்பில் திட்டமிடப்பட்டுள்ளது.
காந்தாரா படத்தில், ரிஷப் ஷெட்டி பெற்ற சம்பளம், ரூ. 4 கோடி. ஆனால், இந்த படத்தையும் இயக்கி, நடிக்கும் ரிஷப் ஷெட்டிக்கு, படத்தை தயாரிக்கும் ஹொம்பலே பிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனம் ரூ. 100 கோடி சம்பளம் தர முன்வந்துள்ளது. அதாவது முதல் படமான காந்தராவை விட இந்த படத்தின் சம்பளம் 25 மடங்கு அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.





