நடிகர் கமல்ஹாசனின் சொந்த தயாரிப்பு நிறுவனம் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல். இதன்மூலம் கமல்ஹாசன் தனது சொந்த படங்களையும் தயாரிக்கிறார். பல ஆண்டுகளாக மற்ற பிரபல நடிகர்கள், பிரபல இயக்குநர்களின் பிற படங்களையும் தயாரித்து வருகிறார். இதில் லாபம், நஷ்டம் என இரண்டுமே கமல்ஹாசனுக்கு தொடர்கிறது.
இப்போது நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கும் ஒரு புதிய படத்தை, ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்த நிறுவனத்துடன், சோனி நிறுவனமும் இந்த படத்தை இணைந்து தயாரிக்கிறது. இதுபோல் பல படங்களை தயாரிக்க ரூ. 2000 கோடி வரை, சோனி நிறுவனம், கமல் தயாரிப்பு நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளதாக தெரிய வருகிறது.
ராணுவ பின்னணியை அடிப்படையாக கொண்ட சிவகார்த்திகேயன் படத்தை, ராஜ்குமார் பெரியசாமி இயக்கி வருகின்றனர். சில மாதங்களாக காஷ்மீரில் இதன் படப்பிடிப்பு நடந்தது. தொடர்ந்து சில வாரங்கள் சென்னையிலும் இந்த படத்தின் படப்பிடிப்பு நடத்தப்பட்டுள்ளது. இன்னும் காஷ்மீரில் ஒரு மாதம் வரை தங்கி மீதமுள்ள படக்காட்சிகளை ஷூட் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளது.
ராஜ்கமல் தயாரிப்பு நிறுவனத்தை பொறுத்த வரை, தயாரிப்பு பட்ஜெட் குறித்த ஒதுக்கீடுகளில், நிபந்தனைகளில் மிக சரியாக இருக்க கூடியவர்கள். குறிப்பிட்ட வரம்புக்குள், எல்லை வகுத்துக்கொண்டு அதற்கேற்ப மட்டுமே படத்தின் தயாரிப்பு செலவுகளை திட்டமிடுவது வழக்கம். ஆனால், இந்த முறை சிவகார்த்திகேயன் படத்தின் பட்ஜெட் திட்டமிட்டதை விட பலமடங்கு எகிறியுள்ளது.
அதாவது, சிவகார்த்தியேகன் படத்துக்காக ஒதுக்கப்பட்ட பட்ஜெட்டை விட ரூ. 25 கோடி அதிகமாக செலவிடப்பட்டது தெரிய வந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த ராஜ்கமல் தயாரிப்பு நிறுவனம், இந்த படத்தயாரிப்பில் கைகோர்த்துள்ள சோனி நிறுவனத்திடம் ரூ. 25 கோடியை தருமாறு கேட்டுள்ளது. ஒப்பந்தம் போட்ட போது என்ன கண்டிசனோ, அதுதான் படம் முடிகிற வரைக்கும் பின்பற்றப்படும். அடிக்கடி ரூல்ஸ் மாற்றும் பழக்கம் எங்கள் நிறுவனத்தில் இல்லை என்று சோனி நிறுவனம் மறுத்துவிட்டது.
அதுமட்டுமின்றி முதல் படத்திலேயே இப்படி ரூ. 25 கோடி பட்ஜெட்டை விட செலவாகி உள்ளதால், அடுத்தடுத்த படங்களில் நாம் இணைந்து பணியாற்ற வேண்டாம். ஒப்பந்தத்தை முறித்துக்கொள்வோம் என்ற முடிவுக்கு வருவதாகவும் சோனி நிறுவனம் தெரிவித்துள்ளது. இதனால், கமல்ஹாசன் அப்செட்டில் இருக்கிறார். இதையடுத்து சிவகார்த்திகேயன், டைரக்டர் ராஜ்குமார் பெரியசாமி சம்பளத்தில், ராஜ்கமல் நிறுவனம் கைவைத்து சில கோடிகளை பறித்துக்கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது.





