இயக்குநராக மட்டுமின்றி நடிகராகவும் தன் திறமையை வெளிப்படுத்திக்கொண்டிருப்பவர் அமீர். யோகி, வடசென்னை போன்ற படங்களில் அவரது சிறப்பான நடிப்பை ரசிகர்கள் வெகுவாக வரவேற்றனர். இப்போது வாடிவாசல் படத்தில், சூர்யா நடிக்காவிட்டாலும் பரவாயில்லை, அமீர் கட்டாயம் நடிக்க வேண்டும் என்று இயக்குநர் வெற்றிமாறனே கூறும் அளவுக்கு சிறந்த நடிகராக அமீர் கவனிக்கப்படுகிறார்.
சமீபத்தில் இயக்குநர் அமீர் அளித்த நேர்காணலில் கூறியதாவது, நான் மௌனம் பேசியதே, ராம், பருத்திவீரன் படங்களை செய்த பிறகு, உங்கள் சினிமா பயணத்தில் சரியாக பருத்திவீரனை 3வது படமாக எடுத்து விட்டீர்கள் என பலரும் கூறினார்கள். ஆனால் அது உண்மையல்ல. நான் எடுக்க ஆசைப்பட்ட படமே வேறு.
பருத்திவீரன் படத்தை நான் முதலில் எடுக்க விரும்பவில்லை. நான் முதன்முதலாக எடுக்க ஆசைப்பட்ட படம் குற்றவாளி. மதுரை மண்ணில் நடந்த, நடந்துக்கொண்டு இருந்த, இப்போதும் நடக்கிற குற்ற சம்பவங்களை மையமாக வைத்துதான் நான் ராவாக ஒரு படம் செய்ய ஆசைப்பட்டேன். இந்த படத்தில் பாடல்கள் இருக்காது. வாழ்வியல் சார்ந்த ஒரு படமாக இருக்கும்.
ஆனால் இப்படிப்பட்ட ஒரு கதையை சொன்ன போது தயாரிப்பாளர் உள்ளிட்ட யாருமே ஏற்கவில்லை. அது 2000ம் ஆண்டு, அந்த காலகட்டத்தில் காதல் படங்களாக வந்துக் கொண்டு இருந்தது. அப்போது போய் இப்படி ஒரு அக்யூஸ்ட் பற்றி படம் எடுத்தால், யாராவது படம் பார்ப்பார்களா, காதல் படமாக எடுங்கள் என வற்புறுத்தினார்கள். அவர்களுக்காக நான் எடுத்த படம்தான் மௌனம் பேசியதே. என்னிடம் அதை தான் அவர்கள் எதிர்பார்த்தனர்.
மௌனம் பேசியதே படத்தை நான், அவர்களின் விருப்பத்துக்காவே எடுத்தேன். நான் விரும்பி எடுத்த படம் இல்லை. என் சினிமா கேரியரில் மௌனம் பேசியதே தான் மிக சுமாரான படமாக இருக்கும் என்றும் அப்போதே கூறினேன். ஆனால், அந்த படத்துக்கு இப்போதும் ஆடியன்ஸ் இருக்கின்றனர். இப்போதும் அந்த படத்தை வெகுவாக ரசிக்கின்றனர். அதற்கு பிறகு ராம், பருத்திவீரன் படங்களை எடுத்தேன்.
பருத்திவீரன் படம் எடுத்த போது 2007 ஆகி விட்டது. அதற்குள் நான் மனதுக்குள் வைத்திருந்த குற்றவாளி படத்தின், கதையின் காட்சிகள் பல படங்களில் வெளிவந்துவிட்டன. அதனால் அந்த கதையை என்னால் எடுக்க முடியவில்லை. குறிப்பாக சுப்ரமணியபுரம் முழுக்க முழுக்க அந்த சாயலில்தான் இருந்தது. இப்படி மீண்டும் நான் எடுத்தால் ரிபீட் ஆகிவிடும் என்பதால், நான் மீண்டும் குற்றவாளி படத்தை எடுக்க விரும்பாமல் அப்படியே விட்டுவிட்டேன். வேறு படத்தில் வந்தாலும், நான் நினைத்திருந்த கதை வந்ததே எனக்கு மகிழ்ச்சிதான் என கூறியிருக்கிறார் நடிகர், இயக்குநர் அமீர்.





