தமிழக அரசியல் வரலாற்றில் எம்ஜிஆருக்கு பிறகு அதிமுகவை கட்டுக்கோப்பாக வழிநடத்தி, தமிழ்நாட்டை ஆட்சி செய்தவர் ஜெயலலிதா. மிலிட்டரி ஆர்டர் முறையில்தான் அவரது அரசியல், கட்சி நிர்வாக செயல்பாடுகள் இருக்கும். அவரது கண்ணசைவுக்கே ஐஏஎஸ் அதிகாரிகள் முதல் அமைச்சர்கள் வரை அனைவரும் கட்டுப்படுவர்.
கண்டிப்பான நிர்வாகத்துக்கு பெயர் பெற்ற ஜெயலலிதா, அதிக கோபம் கொண்டவர். எதற்கும் பயப்படாத துணிச்சல் மிகுந்தவர். குறிப்பாக பிடிவாதம் மிகுந்தவர். தனக்கு ஒரு விஷயம் பிடித்துவிட்டால் அதை நிறைவேற்றியே தீருவார். எம்ஜிஆருக்கு பிறகு தமிழகத்தை ஆட்சி செய்ய நினைத்தவர், அதை செய்து காட்டினார்.
திமுக சட்டசபையில், ஜெயலலிதா அவமதிக்கப்பட்ட நிலையில், அப்போது எம்எல்ஏவாக இருந்த அவர் வெளியேற்றப்பட்டார். மீண்டும் சட்டசபைக்குள் தமிழ்நாட்டின் முதலமைச்சராக நுழைவேன் என சபதம் இட்ட ஜெயலலிதா, அதே போல் முதலமைச்சராகவே சட்டசபைக்குள் வந்தார் என்பதுதான் வரலாறு.
இந்நிலையில், ஜெயலலிதா தமிழக முதல்வராக இருந்த காலகட்டத்தில் வெளிவந்த படம் ரஜினிகாந்த் நடித்த படையப்பா. இதில் நீலாம்பரி என்ற கேரக்டரில் ரம்யாகிருஷ்ணன் நடித்திருந்தார். கோபம், பிடிவாதம், துணிச்சல் என பலவிஷயங்களை உள்ளடக்கிய ஒரு கேரக்டராக இந்த படத்தில் நடித்திருந்தார் ரம்யாகிருஷ்ணன்.
சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய படையப்பா படத்தின் இயக்குநர் கேஎஸ் ரவிக்குமார், நீலாம்பரி கேரக்டரை அப்படியே ஜெயலலிதாவின் கேரக்டரை உள்வாங்கி வைத்திருந்தேன். ஜெயலலிதாவின் இன்பிரேஷனில்தான் அந்த கேரக்டர் உருவாக்கப்பட்டது என்று கூறியிருந்தார்.
இதுகுறித்து சமீபத்தில் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், இதை ஜெயலலிதா உயிரோடு இருந்த போது சொல்லி இருக்கணும். இப்போது வந்து சொல்வது கோழைத்தனம். அவர் இருக்கும்போது சொல்லி இருந்தால், வெளியில் நடமாடி இருக்க முடியுமா என கூறியிருக்கிறார். அது இப்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.





