தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திர நடிகர் சூர்யா, இப்போது கங்குவா படத்தை நடித்து முடித்து இருக்கிறார். அடுத்து சுதா கொங்கரா இயக்கத்தில் புறநானூறு என்ற படத்தில் நடிக்க கமிட் ஆகி இருக்கிறார். இதற்கிடையே இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் படத்தில் நடிக்கவும் ஒப்புக்கொண்டு இருக்கிறார்.
இந்நிலையில் வாடிவாசல் படத்தில் மிக முக்கிய கேரக்டரில் இயக்குநர் அமீர் நடிக்க வேண்டும் என இயக்குநர் வெற்றிமாறன் ஏற்கனவே தெரிவித்திருந்தார். ஆனால் சமீபத்தில் ஞானவேல் ராஜா, பருத்திவீரன் தயாரிப்பு விவகாரத்தில் அமீரை மிகவும் தரக்குறைவாக பேசியது வைரலானது.
இந்த பிரச்னையில் சிவக்குமார், சூர்யா மற்றும் கார்த்தி என அவர்களது குடும்பமே கடும் விமர்சனத்தில் சிக்கியது. பருத்திவீரன் என்ற அற்புத படத்தை தயாரித்து, இயக்கி கார்த்தியை ஒரு நல்ல நடிகராக தமிழ் சினிமாவுக்கு தந்த இயக்குநர் அமீர். அப்படி ஒரு சிறந்த படைப்பாளியை இப்படி திமிராக, இளக்காரமாக பேசியதற்காக மன்னிப்பு கேட்க வேண்டும் என தமிழ் சினிமா நட்சத்திரங்கள் தரப்பில் எதிர்ப்பு குரல் எழுந்தது.
இந்த சூழலில் வாடிவாசல் படத்தில் அமீருடன் சூர்யா இணைந்து நடிப்பாரா என்பது முக்கிய கேள்வியாக ரசிகர்கள் மத்தியில் எழுந்தது. இந்த படத்தில் சூர்யா நடிக்காவிட்டாலும், அமீர் நடிப்பார். அவரது கேரக்டரில் வேறு யாரும் நடிக்க நான் அனுமதிக்க மாட்டேன் என்று திட்டவட்டமாக கூறிவிட்டார் வெற்றிமாறன். சூர்யாவிடம் நேரடியாக, அமீருடன் நடிக்க உங்களுக்கு விருப்பம் இல்லாவிட்டால் தாராளமாக விலகி கொள்ளலாம் என்றே கூறிவிட்டார்.
இந்த சூழலில் நடிகர் சூர்யாவுக்கு ஆங்கிலத்தில், அதாவது பாலிவுட் படத்தில் நடிக்க ஒரு வாய்ப்பு வந்துள்ளது. ஆங்கில படம் ஒன்றில் நடிக்க பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. அதில் முக்கியமாக ஆங்கில படத்தில் நடிக்க கமிட் ஆகிவிட்டால், அது முடியும் வரை வேறு படத்தில் நடிக்க கூடாது என்பது அவர்களது முக்கிய கண்டிஷனாக உள்ளது.
அதனால் வாடிவாசல் படத்தின் படப்பிடிப்பை விரைவில் துவங்குமாறு வெற்றிமாறனிடம் சூர்யா கேட்டுள்ளார். வரும் மார்ச் மாதம், படப்பிடிப்பு துவங்கி 10 நாட்கள் நடத்திவிட்டு பின் ஆங்கில படத்தில் நடிக்க சூர்யா செல்ல திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால் அந்த 10 நாட்களும் அமீர், சூர்யா நடிக்கும் காட்சிகளைதான் இயக்குநர் வெற்றிமாறன் படமாக்க திட்டமிட்டுள்ளார். அதனால் அமீருடன் நடிக்க சூர்யாவுக்கு விருப்பமில்லாத பட்சத்தில் வாடிவாசலை புறக்கணித்துவிட்டு ஆங்கில படத்தில் நடிக்க சூர்யா சென்றுவிடுவார் என்ற தகவல் வெளிவந்துள்ளது.





