கடந்த 2022ம் ஆண்டில் வெளியான படம் காந்தாரா. இந்த படம் நேரடியாக கன்னட மொழியில் வெளியானது. பிறகு படத்துக்கு கிடைத்த பலத்த வரவேற்பை தொடர்ந்து தமிழ் தெலுங்கு இந்தி என பிறமொழிகளிலும் டப்பிங் செய்யப்பட்டு காந்தாரா படம் வெளியானது. இந்த படத்தை சகல தரப்பு ரசிகர்களும் வரவேற்று கொண்டாடினர்.
இந்த படத்தில் நாயகனாக நடித்த ரிஷப் ஷெட்டியே, டைரக்ட் செய்திருந்தார். கடவுள் பக்தியில் திளைத்த மலைவாழ் மக்களுக்காக வழங்கப்பட்ட நிலத்தை அபகரிக்கும் வாரிசு ஜமீன்தாரிடம் இருந்து அந்த நிலத்தை நாயகன் போராடுவதே படத்தின் கதை. இதில் ரிஷப் ஷெட்டி நடிப்பும் குறிப்பாக கிளைமாக்ஸ் காட்சியும் படம் பார்த்த ரசிகர்களை மெய் சிலிர்க்க வைத்தது.
இந்த படத்தை பார்த்த நடிகர் ரஜினிகாந்த், காந்தாரா படத்தின் இயக்குனர் மற்றும் ஹீரோவாக நடித்த ரிஷப் ஷெட்டியை, சென்னை போயஸ் கார்டனில் உள்ள தனது வீட்டுக்கு நேரில் அழைத்து பாராட்டினார். இந்த படத்தில் நடித்தததற்கான ரிஷப் ஷெட்டிக்கு மத்திய அரசின் தேசிய விருதும் கிடைத்தது.
இப்போது காந்தாரா படத்தின் 2ம் பாகம் உருவாகி வருகிறது. கடந்த 2 ஆண்டுகளாக படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் இப்போது கர்நாடகா மாநிலம் ஹாசன் மாவட்டத்தில் உள்ள ஹெரூர் வனப்பகுதியில் கடந்த 2ம் தேதி முதல் படப்பிடிப்பு ஜரூராக நடந்து வருகிறது.
வனப்பகுதிக்குள் ஷூட்டிங் ஸ்பாட்டில் வெடி பொருட்களை பயன்படுத்தியதாகவும், தீ வைத்து அங்குள்ள இயற்கை சுற்றுச்சூழலை மாசு படுத்தியதாகவும் கூறப்படுகிறது. இதற்கு அங்குள்ள கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால் படக்குழுவுக்கும், அங்கிருந்த கிராம மக்களுக்கும் மோதல் ஏற்பட்டு, இதில் கிராமவாசி ஒருவர் காயமடைந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
இதையடுத்து வனப்பகுதிக்குள் நடந்துவரும் காந்தாரா 2 படத்தின் படப்பிடிப்பை உடனடியாக நிறுத்த வேண்டும், அங்கு படப்பிடிப்பை நடத்த அனுமதிக்க கூடாது என ஹெரூர் வனப்பகுதி கிராமங்களை சேர்ந்த மக்கள் எசலூர் போலீஸ் ஸ்டேஷனில் காந்தாரா 2 படக்குழு மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. இது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.





