சென்னையில் மிக்ஜம் புயல் ஏற்படுத்திய கனமழையால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். பலரும் வீடுகள், உடைமைகளை இழந்துள்ளனர். வாழ்வாதாரமான தொழிலை இழந்துள்ளனர். பலவிதங்களில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு தரப்பிலும், தனியார் அமைப்புகள் சார்பிலும், பொது ஆர்வலர்கள் தரப்பிலும் உதவிகள் தொடர்ந்து செய்யப்படுகின்றன.
தமிழ் சினிமா நடிகர் தரப்பில் இருந்தும் பலவிதமான உதவிகள் செய்யப்பட்டுள்ளன. ரஜினி, கமல், விஜய், அஜீத் ரசிகர்கள் பல்வேறு இடங்களுக்கு சென்று பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவியிருக்கின்றனர். உணவு பொட்டலங்கள், தண்ணீர் பாட்டல்களை தந்துள்ளனர். அரிசி, பருப்பு உள்ளிட்ட மளிகை பொருட்களை பலருக்கு கொடுத்து உதவியுள்ளனர்.
அதுமட்டுமின்றி வளர்ந்து வரும் காமெடி நடிகரான விஜய்டிவி புகழ் கலக்கப்போவது யாரு பாலா, இதுவரை தனது சொந்த பணத்தில் ரூ. 5 லட்சம் வரை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நேரில் சென்று உதவியிருக்கிறார். நைட்டீஸ், பெட்சீட், லுங்கி உட்பட 340 பேருக்கு தலா ஆயிரம் ரூபாய் என நிதியுதவியும் செய்திருக்கிறார்.
பெரிய நடிகர்கள் தரப்பில் கார்த்தி, சூர்யா ரூ. 10 லட்சம், சிவகார்த்திகேயன் 10 லட்சம் முதலமைச்சர் நிவாரண நிதியாக தந்துள்ளனர். கவிஞர் வைரமுத்து ரூ. ஒரு லட்சம் தந்துள்ளார். மற்றபடி நடிகர்கள் தரப்பில் இருந்து பெரிய அளவில் யாரும் நிவாரண நிதி அளித்ததாக தெரியவில்லை. ஆனால் சின்ன சின்ன நடிகர்கள் களத்தில் இறங்கி பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவியுள்ளனர்.
இந்நிலையில் டாப் ஸ்டார் நடிகர்களில் மிக முக்கியமானவராக அஜீத்குமார் தரப்பில் இருந்து எந்த உதவியும் மக்களுக்கு வழங்கப்படவில்லை என்ற சர்ச்சை எழுந்துள்ளது. ஆனால் அஜீத்குமார் தரப்பில் இருந்து மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல உதவிகள் பலவிதங்களில் செய்யப்பட்டுள்ளதாக இப்போது தகவல் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து பத்திரிகையாளர் சபீதா ஜோசப் கூறுகையில், நடிகர் அஜீத்குமார் இப்போதைய சூழலில் மழையால் பாதிக்கப்பட்ட சென்னை மக்களுக்கு பலவிதங்களில் உதவிகளை செய்திருக்கிறார். மழையால் பாதிக்கப்பட்ட மக்களில் 100 பேரை அஜீத் வீட்டில் தங்க வைத்து உணவு அளித்து வருகிறார். தமிழ்நாடு அரசு முதலமைச்சர் நிவாரண நிதியாக ரூ. 2கோடி வழங்கியுள்ளார்.
மழையால் பாதிக்கப்பட்ட 150 பேருக்கு அவர்களது வங்கி கணக்குகளில் தலா 10 ஆயிரம் ரூபாய் அளித்துள்ளார். பாதிக்கப்பட்ட மக்களுக்கு அஜீத் வீட்டில் இருந்து பிரியாணி சமைத்து கொண்டு சென்று தரப்பட்டுள்ளது. வெள்ளத்தில் சிக்கிய மக்களை மீட்க போட் அனுப்பி அவர்களை மீட்க உதவி இருக்கிறார் அஜீத்குமார் என்று கூறியிருக்கிறார். அதற்கு எல்லா ஆதாரமும் இருக்கிறது என்கிறார் சபீதா ஜோசப்.





