நடிகர் ரஜினிகாந்த் தற்போது அடுத்த அடுத்த படங்களில் பிசியாக இருக்கிறார். சமீபத்தில் தனது மகள் ஐஸ்வர்யா இயக்கத்தில் லால் சலாம் படத்தில் அவர் நடித்து முடித்தார். இதில் அவர் இஸ்லாமியராக நடித்துள்ளார். படத்தின் நாயகர்களாக விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். கிரிக்கெட் விளையாட்டில் மதம் சார்ந்த அரசியல் கலக்கப்படும் போது என்னென்னவெல்லாம் ஏற்படும் என்பதை அடிப்படையாகக் கொண்டு இந்தத் திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது.
இதன் டீசர் சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றது. வரும் பொங்கலன்று இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகிறது. இந்தத் திரைப்படத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிடுகிறது. இந்தப் படத்திற்குப் பிறகு, தனது 170 ஆவது திரைப்படத்தில் கவனம் செலுத்தி வருகிறார் ரஜினிகாந்த்.
இதனை ஜெய் பீம் படத்தை எடுத்த ஞானவேல் இயக்குகிறார். இதில் அமிதாப்பச்சன், பகத் பாசில், ராணா, மஞ்சு வாரியர், துஷாரா விஜயன், ரித்திகா சிங் ஆகியோர் நடிக்கின்றனர். இதற்கு அனிருத் இசை அமைக்கிறார். தலைவரின் 170 வது திரைப்படத்தின் படப்பிடிப்பு திருவனந்தபுரத்தில் தொடங்கியது. பிறகு திருநெல்வேலி, மும்பை, சென்னை ஆகிய பகுதிகளில் நடைபெற்றது. இதில் ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரியாக ரஜினிகாந்த் வருகிறாராம்.
இந்தத் திரைப்படத்தை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் உடன் ரஜினி இணைகிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் இதனை தயாரிக்கிறது. இதற்கும் அனிருத்தே இசையமைக்க அன்பறிவ் மாஸ்டர்கள் சண்டை பயிற்சியாளராக செயல்படுகின்றனர். இதன் சூட்டிங் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் தொடங்குகிறது. இதற்கான கதை எழுதும் பணியில் லோகேஷ் ஈடுபட்டு உள்ளாராம்.
அதுமட்டுமில்லாமல் இந்த திரைப்படம் நிச்சயமாக எல் சி யு-வில் வராது என்றும் அவர் தெரிவித்தார். இது ஒரு பக்கம் இருக்க, ரஜினிகாந்த் ஞானவேல் திரைப்படத்திற்கான பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. இந்த திரைப்படம் என்கவுண்டர் மையமாக வைத்து எடுக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. ரஜினி தனது 73 வது பிறந்த நாளை இன்று கொண்டாடும் நிலையில், அந்தத் திரைப்படத்திலிருந்து டைட்டில் மற்றும் டீசர் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இதை எடுத்து தயாரிப்பு நிறுவனமான லைக்கா இன்று வீடியோ வெளியிட்டது. அதில் இந்தத் திரைப்படத்திற்கு வேட்டையன் என தலைப்பிடப்பட்டுள்ளது. டீசரில் ரஜினி பேசும் குறி வச்சா இரை விழனும் நன்றாக இருப்பதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர். டீசர் முழுக்க கருப்பு கண்ணாடி அணிந்து கொண்டு கையில் தடியும் வைத்திருப்பதால், அவர் ஒருவேளை பார்வையற்ற மாற்று திறனாளியாக இதில் நடித்திருக்கலாம் என்று சிலர் கூறி வருகின்றனர். அதேசமயம் ஒரு காட்சியில் அவர் புத்தகம் படிப்பது போலவும் காட்டப்பட்டுள்ளது. இதனால் ஞானவேல் என்ன மாதிரியான கதை அம்சத்தை வைத்திருப்பார் என்று பலரும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.





