இன்று நேற்று நாளை என டைம் டிராவல் சப்ஜெக்டை வைத்து ஒரு சயின்டிபிக் படம் தந்தார் டைரக்டர் ரவிக்குமார். இந்த படத்தில் விஷ்ணு விஷால், கருணாகரன் முக்கிய கேரக்டர்களில் நடித்திருந்தனர். முன்னோக்கி, பின்னோக்கி குறிப்பிட்ட காலகட்டத்துக்கு செல்லும் அந்த படத்தின் திரைக்கதை வெகு எளிதாக புரியும்படி அழகாக சொல்லப்பட்டிருந்தது.
அறிவியல்பூர்வமான, புரிவதற்கு சற்று சிரமமான அந்த டைம் டிராவல் கதையை சாதாரண ரசிகர்களும் எளிதில் புரிந்துக்கொள்ளும் விதமாக அந்த படத்தை தந்திருந்தார் திருப்பூரைச் சேர்ந்த டைரக்டர் ரவிக்குமார். அந்த படத்தை பார்த்த பின், அவரது இயக்கத்தில் படம் பண்ண வேண்டும் சிவகார்த்திகேயனே அழைத்து, இந்த அயலான் படத்தை இயக்கும் வாய்ப்பை தந்தார்.
கடந்த தீபாவளிக்கே இந்த படம் ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சில காரணங்களால் படத்தின் ரிலீஸ் தள்ளிப் போய்க்கொண்டே இருக்கிறது. வரும் பொங்கல் பண்டிகைக்கு படம் கண்டிப்பாக ரிலீஸ் ஆகிவிடும் என்று உறுதியாக கூறப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகள் வெகு வேகமாக இப்போது நடந்து வருகின்றன.
அயலான் படம் பான் இந்தியா படமாக உருவாக்கப்பட்டுள்ளது. சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ரகுல்ப்ரீத் சிங் நடித்துள்ளார். ஏஆர் ரகுமான் இசையமைத்துள்ளார். 24 ஏஏம் ஸ்டுடியோ, கேஜேகே ஸ்டுடியோ இணைந்து இந்த படத்தை தயாரித்துள்ளது. லைவ் ஆக்சன் படமான இதில் 4500க்கும் மேற்பட்ட விஎப்எக்ஸ் காட்சிகள், கிராபிக்ஸ் காட்சிகள் உள்ளதாக கூறப்படுகிறது. ரசிகர்களை மிகவும் கவரும் விதத்தில் இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளது.
அயலான் படத்தில் ஏலியன் இடம்பெறும் காட்சிகளும் அது பேசும் வசனங்களும் இடம்பெறுகின்றன. விண்வெளியில் இருந்து வந்த ஏலியன்களாக இருந்தாலும் தமிழ் படத்தில் தமிழ்தான் பேசியாக வேண்டும் என்பதால், அதில் லாஜிக் பார்க்க வாய்ப்பில்லை. அதே நேரத்தில் ஏலியன் குரலில் டப்பிங் பேசுவது யார் என்ற குழப்பம் ஆரம்பத்தில் இருந்தே இருந்து வந்தது. மாவீரன் படத்தில், சிவகார்த்திகேயனுக்கு பின்னணி குரலில் ஒலிக்கும் மாவீரன் குரலாக விஜயசேதுபதி பேசியதால், ஏலியனுக்கும் அவரே பேசுவாரோ என எதிர்பார்க்கப்பட்டது.
இதையடுத்து நடிகர்கள் வடிவேலு, சந்தானம், சூரி போன்றவர்களின் பெயர்களும் இந்த ஏலியன் பின்னணி குரல் குறித்த விஷயத்தில் அடிபட்டது. வழக்கமாக இதுபோன்ற கார்டூன் படங்களுக்கு பேசுபவர்களை அழைக்கலாமா என்ற யோசனையும் எழுந்தது. ஆனால், டிவி சேனல் கார்டூன் நெட்வொர்க் போல அயலான் மாறிவிடக்கூடாது என்பதால், நடிகர் சித்தார்த்தை அழைத்து, ஏலியனுக்கு பின்னணி குரல் பேச வைத்துள்ளது தெரிய வந்துள்ளது.





