ஆர் எம் எஸ் டைட்டானிக் என்ற கப்பல் 1912 ஆம் ஆண்டு இங்கிலாந்தின் சௌத் ஆம்ப்டன் கடல் பகுதியில் இருந்து கிளம்பி அமெரிக்காவின் நியூ யார்க் நோக்கி சென்றுகொண்டிருந்தது. அப்போது எதிர்பாராதவிதமாக பனிப்பாறையில் மோதி கப்பல் நீருக்குள் மூழ்கியது.

இந்த விபத்தில் கப்பலில் பயணித்த 2000க்கும் மேற்பட்ட பயணிகளில் 1,500க்கும் மேற்பட்ட பயணிகள் நீருக்குள் மூழ்கி உயிரிழந்தனர். இந்த சம்பவத்தை அடிப்படையாக வைத்து 1997 ஆம் ஆண்டு ஹாலிவுட்டில் “டைட்டானிக்” திரைப்படம் உருவானது. இத்திரைப்படத்தை ஜேம்ஸ் கேமரூன் மிக பிரம்மாண்டமாக உருவாக்கியிருந்தார். இத்திரைப்படம் உலகளவில் மிக புகழ் பெற்ற திரைப்படமாகும்.
இந்த நிலையில் கடலுக்கு அடியில் கிடக்கும் டைட்டானிக் கப்பலின் சிதிலங்களை பார்வையிட சில நாட்களுக்கு முன்பு டைட்டன் என்ற சிறிய நீர் மூழ்கி கப்பலில் 5 பேர் சென்றனர். அப்போது எதிர்பாராவிதமாக கப்பல் வெடித்து சிதறியதில் அந்த கப்பலில் பயணித்த பயணிகள் உயிரிழந்தனர். இந்த சம்பவம் தற்போது அதிர்ச்சியை கிளப்பியுள்ள நிலையில் “டைட்டானிக்” திரைப்படத்தின் இயக்குனரான ஜேம்ஸ் கேமரூன் மேலும் ஒரு அதிர்ச்சியை கிளப்பியுள்ளார்.

டைட்டன் நீர் மூழ்கி கப்பல் வெடித்த சம்பவம் குறித்து பேசியுள்ள ஜேம்ஸ் கேமரூன், “டைட்டானிக் கப்பல் மூழ்கிய இடத்திலேயே இந்த விபத்து நடந்திருக்கிறது. இது ஆச்சரியமாக இருக்கிறது. நான் கிட்டத்தட்ட 33 முறை சிதிலமடைந்த டைட்டானிக் கப்பலை பார்க்க கடலுக்குள் சென்றுள்ளேன். அப்போது எனக்கும் கூட அந்த பகுதியில் சில பயங்கரமான அனுபவங்கள் ஏற்பட்டிருக்கிறது” என்று கூறியுள்ளார்.

மேலும் பேசிய அவர், “டைட்டானிக் கப்பல் மூழ்கியுள்ள பகுதியில் இனம் புரியாத ஏதோ ஒரு சக்தி இருக்கிறது. டைட்டன் நீர் மூழ்கி கப்பலில் அதிக தொழில்நுட்ப வசதிகள் உள்ளன. அதில் பயணித்தவர்கள் நிச்சயமாக விபத்தை முன் கூட்டியே கணித்திருப்பார்கள். ஆனால் எதிர்பாராவிதமாக அந்த நீர் மூழ்கி கப்பல் வெடித்து அனைவரும் உயிரிழந்துவிட்டனர்” என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.





