நடிகர் விஜய் இப்போது கிரேட்டஸ்ட் ஆப் ஆல்டைம் படத்தில் நடித்துக்கொண்டு இருக்கிறார். இந்த படத்துக்கு பிறகு விஜய் 69 படத்தில் அவர் நடிக்க வேண்டும். ஆனால் இதுவரை அந்த படம் குறித்த எந்தவிதமான தகவலும் வெளியாகவில்லை. இது விஜய் ரசிகர்கள் மத்தியில் ஏமாற்றத்தை தந்துள்ளது.
நடிகர் விஜயை பொருத்தவரை ஒரு படத்தில் நடிக்கும் போது அதன் 50 சதவீத படப்பிடிப்பு முடிந்து விட்டாலே, தனது அடுத்த படத்துக்கான டைரக்டர், தயாரிப்பாளர், இசையமைப்பாளர்கள், நடிகர், நடிகையர் உள்ளிட்ட விவரங்களை கவனிக்க ஆரம்பித்து விடுவார்.
அப்போதுதான் நடித்துக்கொண்டு இருக்கும் படத்தை முடித்தவுடன் அடுத்த படத்தின் ஷூட்டிங்கில் தொடர்ச்சியாக பங்கேற்க முடியும். இல்லை என்றால் மாதக்கணக்கில் படத்தில் நடிக்காமல் சும்மா இருக்க வேண்டும். அந்த மாதிரி நாட்களை வீணாக்க விரும்பாததால் விஜய் இந்த பார்மூலாவை பல ஆண்டுகளாக பின்பற்றி வருகிறார்.
ஆனால் கோட் படத்தை பொருத்த வரை 75 சதவீத படப்பிடிப்பை முடிந்த நிலையிலும் அடுத்த படத்துக்கான எந்த தகவலும் இல்லை. இதற்கிடையே ஆர்ஆர்ஆர் படத்தை தயாரித்த டிடிவி எண்டர்டெயின்ட்மென்ட் நிறுவனத்தில் நடிக்க விஜயிடம் பேச்சு வார்த்தை நடந்ததாக தகவல் வெளியானது.
இந்த சூழலில் இப்போது வேல்ஸ் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனம் ஐசரி கணேஷ் தயாரிப்பில் விஜயை நடிக்க கால்ஷீட் கேட்டிருப்பதாகவும், விஜய் தரப்பில் இருந்து அதற்கு கிரீன் சிக்னல் கிடைத்து விட்டதாகவும் தகவல் பரவி வருகிறது. ஆனால் இது இன்னும் உறுதியான முடிவாக தெரியவில்லை.
அதுமட்டுமின்றி வேல்ஸ் பிக்சர்ஸ் தயாரிக்கும் படத்தில் விஜய் நடிக்கும் பட்சத்தில், அந்த படத்தை இயக்கப் போவது பேட்ட, ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படங்களை தந்த இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ்தான் என்றும் தகவல் வெளிவந்துள்ளது. ஏற்கனவே விஜயிடம் இரண்டுமுறை கார்த்திக் சுப்பராஜ் கதை சொன்ன போது, நான் வேற மாதிரி எதிர்பார்க்கிறேன் என்று விஜய் சொன்ன நிலையில், இந்தமுறை எப்படியும் கார்த்திக் சுப்பராஜ் கதையை, விஜய் ஓகே செய்து விடுவார் என்றும் கோலிவுட்டில் பரபரப்பாக பேசப்படுகிறது.





