தமிழ் சினிமாவில் நடிகர் வடிவேலுவுக்கு வைகைப்புயல் என்றொரு பெயர் உண்டு. ஒரு காலகட்டத்தில் தினமும் ரூ. 5 லட்சம் சம்பளம் வாங்கிய பிஸியான நடிகராக இருந்தவர். வடிவேலு இல்லாத படங்களே இல்லை என்று சொல்லும் அளவுக்கு நிறைய படங்களில் நடித்தவர் வடிவேலு. இப்போதும் டிவி சேனல்களில், யூடியூப்களில் அவரது காமெடி ரசிகர்கள் பார்த்து ரசித்து ரசித்த சிரிக்கின்றனர்.
ஆனால் நடிகர் விஜயகாந்தை கடுமையாக விமர்சித்தது, திமுகவுக்கு ஆதரவாக செயல்பட்டது, சினிமாவில் இயக்குநர் ஷங்கருடன் தகராறு என வடிவேலு சில பிரச்னைகளில் சிக்கியதால், கடும் விமர்சனங்களுக்கு ஆளானார். ஒரு கட்டத்தில் சினிமா வாய்ப்புகளே இல்லாத நிலைக்கு தள்ளப்பட்டார். அந்த இடைவெளியில் சந்தானம், சூரி போன்றவர்களின் காமெடி ரசிகர்களுக்கு பிடித்துப் போனதால் வடிவேலுவை மறந்து போயினர்.
எனினும் பத்து ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் சினிமாவில் நடிக்க துவங்கினார் வடிவேலு. நாய் சேகர் ரிட்டர்ன், கத்தி சண்டை போன்ற படங்களின் மூலம் ரீ என்ட்ரி ஆன வடிவேலுவுக்கு முதலில் கிடைத்த வரவேற்பும், ஆதரவும் ரசிகர்களிடம் கிடைக்கவில்லை. ஏனென்றால் அவரது முக தோற்றமும், குரலும் மாறிப்போனதால் ரசிகர்களிடம் அவரது காமெடி எடுபடவில்லை.
இதில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட படம் பி வாசு இயக்கிய சந்திரமுகி 2 . இந்த படத்தில் முருகேசன் என்ற கேரக்டரில் வடிவேலு நடிப்பை பார்த்த ரசிகர்கள் பலரும், இந்த படத்தில் வடிவேலு நடிக்காமலேயே இருந்திருக்கலாம் என விமர்சிக்கும் அளவுக்கு அவரது நடிப்பும், வசனங்களும் ரசிகர்களுக்கு பிடிக்காமல் போனது. இனி காமெடி நடிப்பு வடிவேலுவுக்கு எடுபடாது என துணை நடிகர் மீசை ராஜேந்திரன் போன்றவர்கள் வெளிப்படையாகவே விமர்சித்தனர்.
இந்நிலையில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வடிவேலு, உதயநிதி நடித்த மாமன்னன் படம் நல்ல வரவேற்பை பெற்றது. இயக்குநர் மாரிசெல்வராஜின் சொந்த மாவட்டம் தூத்துக்குடி. ஸ்ரீவைகுண்டம், நெல்லை மாவட்டம் உள்ளிட்ட பகுதிகளில் மழைவெள்ளம் பாதித்த பகுதிகளில், அமைச்சர் உதயநிதியுடன் இணைந்து நிவாரண பணிகளில் மாரி செல்வராஜ் ஈடுபட்டனர். இதை சிலர் கிண்டலாக விமர்சித்தனர்.
இதுகுறித்து பேசிய நடிகர் வடிவேலு, இயக்குநர் மாரி செல்வராஜூக்கு அது சொந்த ஊர். அந்த ஊரின் மேடு பள்ளங்கள் குறித்து அவருக்கு தான் தெரியும். ஏன் அவர் போகக் கூடாது, அவரது ஊரில் அவர் போகாமல் வேறு யார் போவார்கள் என்று பேசிய வடிவேலு, அவர் என்ன அமெரிக்காவில் இருந்து வந்திருக்கிறாரா என கேள்வியையும் எழுப்பியுள்ளார். அது இப்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.





