நடிகர் விஜய் இப்போது வெங்கட்பிரபு இயக்கத்தில் விஜய் 68 படத்தில் நடித்து வருகிறார். வரும் 31ம் தேதி மாலை 6 மணியளவில் இந்த படத்தின் டைட்டில் வெளியாக உள்ளது. இந்த படத்தின் டைட்டில் பாஸ் என பலரும் கூறிவந்த நிலையில், படத்தின் தயாரிப்பாளர் ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் அர்ச்சனா கல்பாத்தி, விஜய் படத்தின் பெயர் பாஸ் இல்லை என திட்டவட்டமாக மறுத்து ஒரு பதிவை செய்திருந்தார்.
நடிகர் விஜய் இந்தமுறை சட்டசபை தேர்தலை எதிர்கொள்ளும் முடிவில் உறுதியாக இருக்கிறார். அந்த வகையில்தான் பலமுறை விஜய் மக்கள் இயக்கம் சார்ந்த முக்கிய நிர்வாகிகள், அமைப்பு சார்பு அணிகள் சார்ந்த நிர்வாகிகளை அழைத்து, பனையூரில் உள்ள அவரது பண்ணை வீட்டில் ஆலோசனை கூட்டங்களை நடத்தினார்.
அதிலும் குறிப்பாக பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்பு தேர்வில் 2022ம் ஆண்டில் தொகுதி வாரியாக முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ மாணவியர், அவரது பெற்றோருடன் நேரில் அழைத்து பரிசுத்தொகைகள் வழங்கி, பொன்னாடை போர்த்தி கவுரவித்தார். இது இளம் வயதினர் மத்தியில் அவருக்கு ஒரு சூப்பர் இமேஜை ஏற்படுத்தும் முயற்சியாக அரசியல் விமர்சகர்கள் தரப்பில் பேசப்பட்டது.
விஜய் 2026 சட்டசபை தேர்தலில், தமிழ்நாடு முழுவதும் அனைத்து தொகுதிகளிலும் தனது விஜய் மக்கள் இயக்கம் சார்ந்தவர்களை வேட்பாளர்காக நிறுத்த உள்ளார். இதற்கிடையே அவர் அதிகாரபூர்வமாக அரசியல் கட்சி துவங்கிய பின், அவருடன் சேர்ந்துக்கொள்ளும் பிரபல நடிகர், நடிகையர் யாரேனும் இருந்தால், பிரபலத்தின் அடிப்படையில் அவர்களுக்கும் போட்டியிட விஜய் வாய்ப்பளிக்கலாம்..
திமுகவுடன் கூட்டணி சேர்ந்துவிட்ட மக்கள் நீதி மய்யம் கமல்ஹாசன், விஜயுடன் கூட்டு சேர வாய்ப்பில்லை. திமுக, விஜயின் பிரதான அரசியல் எதிரியாக மாறும் பட்சத்தில் சீமான், விஜய் பக்கம் வர அதிக வாய்ப்புள்ளது. ஏனெனில் இளைஞர்களின் ஆதரவு விஜய்க்கு மிக அதிகமாக இருக்கிறது. நண்பர் என்ற முறையில் அஜீத்குமார் கூட விஜய்க்கு தேர்தல் நேரத்தில் ஆதரவு தர முன்வரலாம். ஏனெனில் அஜீத்குமார், விஜய் இடையே நல்ல நட்பு நிலையே இன்றுவரை நீடிக்கிறது.
விஜய் 68க்கு பிறகு இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் விஜய் 69 படம் எடுக்கப்பட உள்ளதாக ஏற்கனவே தகவல் இருந்தது. ஆனால் லேட்டஸ்ட் தகவலின்படி, விஜய் 68 படத்தை முடித்த கையோடு விஜய் 2 ஆண்டுகளுக்கு படங்களில் நடிக்க போவதில்லை. முழு கவனத்தையும் தமிழக அரசியல் பக்கம் திருப்ப முடிவு செய்திருக்கிறார். அதனால், ஏற்கனவே 2 முறை விஜயிடம் கதை சொல்லி ஏமாற்றத்தில் உள்ள கார்த்திக் சுப்புராஜூக்கு 3வது முறையாக இப்போதும் விஜய் தனது படத்தை இயக்க வாய்ப்பு மறுத்துவிட்டார் என்ற தகவல் வைரலாகி வருகிறது.





