தீபாவளி பொங்கல் என ஒவ்வொரு பண்டிகையின் போதும் பலருக்கும், ஒரு பெரிய நட்சத்திரத்தின் படத்தை பார்ப்பதுதான் முழுமையான கொண்டாட்டத்தை கொடுக்கும். அந்த வகையில் இந்த ஆண்டு பொங்கலுக்கு தளபதி விஜய் நடிப்பில் வாரிசு திரைப்படமும், அஜித் குமார் நடிப்பில் துணிவு திரைப்படமும் வெளியானது. இதில் விஜய் திரைப்படமான வாரிசு நேரடியாக தெலுங்கிலும் வெளியிடப்பட்டது.
மிகப்பெரும் எதிர்பார்ப்பில் வெளியான இந்த திரைப்படம், சுமாரான விமர்சனத்தையே பெற்றது. இருப்பினும் குடும்ப ஆடியன்ஸ்கள் இந்த திரைப்படத்திற்கு நல்ல வரவேற்பை கொடுத்ததால், வசூல் ரீதியாக இந்த திரைப்படம் வெற்றி பெற்றது. இதே போல் ஹெச் வினோத் இயக்கத்தில் வெளிவந்த துணிவு திரைப்படமும், நல்ல வசூலை பெற்றது.
நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரு வித்தியாசமான அஜித்தை இதில் பார்க்க முடிந்ததாக பலரும் கருத்து தெரிவித்தனர். இந்தப் படத்திற்கு பிறகு விஜய்க்கு லியோ படமும் வெளியாகி வெற்றி பெற்றது. அஜித் தற்போது விடாமுயற்சி திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில் கடந்த தீபாவளியன்று கார்த்திக் சுப்புராஜின் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் திரைப்படமும், கார்த்திக்கு ஜப்பான் திரைப்படமும் வெளியாகின.
ஆனால் பெரிய நட்சத்திரங்கள் திரைப்படம் எதுவும் ரிலீஸ் ஆகாததால் சற்று அதிருப்தியில் இருந்தார்கள் ரசிகர்கள். இந்த நிலையில் வரும் பொங்கலுக்கு வரும் திரைப்படங்கள் குறித்த தகவல் தற்போது வெளியாகியிருக்கிறது. முதலில் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கும் லால் சலாம் படம் பொங்கலுக்கு வெளியாவதாக அறிவிக்கப்பட்டது. இதை ரஜினியின் மகள் ஐஸ்வர்யா இயக்கி இருக்க, விஷ்ணு விஷால் விக்ராந்த் ஆகியோர் நடித்துள்ளனர்.
முதலில் பொங்கல் பண்டிகைக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்ட இந்த திரைப்படம் தற்போது அந்த ரேஸில் இருந்து பின்வாங்கி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் மீதம் இருப்பதால், அது வெளியாவதில் சிக்கல் எழுந்துள்ளது. இந்த நிலையில் தனுஷின் கேப்டன் மில்லர் திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகிறது. இதே போல் நீண்ட நாட்களாக கிடப்பில் இருக்கும் சிவகார்த்திகேயனின் அயலான் திரைப்படமும், பொங்கல் விடுமுறையை குறி வைத்துள்ளது.
சுந்தர் சி யின் அரண்மனை படத்தின் நான்காம் பாகமும் முதலில் பொங்கலுக்கு வெளியாக இருந்து பின்னர் பின் வாங்கியது. இந்த நிலையில் தற்போது அருண் விஜயின் அச்சம் என்பது இல்லையே என்னும் படம் பொங்கலுக்கு வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முழுக்க முழுக்க வெளிநாட்டில் எடுக்கப்பட்டிருக்கும் இந்தப் படத்தை ஏஎல் விஜய் இயக்கியிருக்கிறார். இந்தப் படத்தை லைக்கா நிறுவனம் வெளியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பொங்கல் பண்டிகைக்கு மூன்று திரைப்படங்கள் வெளியாவது உறுதி செய்யப்பட்டுள்ளது.





