நடிகர் ரஜினிகாந்த் தற்போது வேட்டையன் திரைப்படத்தில் கவனம் செலுத்தி வருகிறார். கூட்டத்தில் ஒருவன், ஜெய் பீம் ஆகிய திரைப்படங்களை இயக்கிய ஞானவேல் இந்த படத்தை இயக்குகிறார். இதில் ரஜினிகாந்துடன் அமிதாப் பச்சன், பகத் பாசில், மஞ்சு வாரியர், துஷாரா விஜயன், ரித்திகா சிங் உள்ளிட்ட ஏராளமானோர் நடிக்கின்றனர். லைக்கா நிறுவனம் இதனை தயாரிக்கிறது. அனிருத் படத்திற்கு இசையமைக்கிறார்.
இதன் ஷூட்டிங் திருவனந்தபுரத்தில் ஆரம்பித்தது. பிறகு திருநெல்வேலி, மும்பை, சென்னை ஆகிய பகுதிகளில் நடைபெற்ற நிலையில், அடுத்ததாக தூத்துக்குடியில் ஷூட்டிங் நடைபெற இருக்கிறது. இதற்காக விமானம் மூலம் தூத்துக்குடிக்கு அவர் சென்றுள்ளார். என்கவுண்டரை மையப்படுத்தி இந்த திரைப்படம் எடுக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த திரைப்படத்திற்குப் பிறகு லோகிஸ் கனகராஜ் உடன் ரஜினிகாந்த் இணைகிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் இதனை தயாரிக்க, அனிருத் இசையமைக்கிறார். இதற்கான படப்பிடிப்பு அடுத்த ஆண்டு மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்தில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படம் குறித்து பல்வேறு தகவல்களை லோகேஷ் கனகராஜ் சமீபத்தில் பகிர்ந்தார்.
தற்போது இதற்கான கதையை எழுதி வருவதாக அவர் கூறினார். படத்தின் ஒன்லைனைக் கூறியதும் ரஜினி கட்டிப்பிடித்து தன்னை வாழ்த்தியதாகவும், மாதம் தோறும் அவர் தனக்கு செல்போனில் கால் செய்து படம் குறித்து விசாரிப்பதாகவும் தெரிவித்தார். படத்தில் ஏதேனும் மாற்றம் இருந்தால் அதை ரஜினியிடம் தான் கூறுவதாகவும், அதனை சூப்பர் ஸ்டார் ஆவலுடன் கேட்பதாகவும் லோகேஷ் கனகராஜ் குறிப்பிட்டு இருந்தார்.
மேலும் இந்த திரைப்படத்தில் காண ரிலீஸ் தேதியை இந்த முறை முன்கூட்டியே அறிவிக்கப் போவதில்லை என்றும் அவர் தெளிவுபடுத்தி இருந்தார். படத்தில் ஏராளமான நட்சத்திரங்கள் நடிக்க இருப்பதாக லோகேஷ் பகிர்ந்தார். இந்த நிலையில் சிவகார்த்திகேயன் ரஜினி படத்தில் இணைவதாக தகவல் வெளியானது. அது மட்டுமல்லாமல் தெலுங்கு மலையாளம் கன்னடம் மற்றும் இந்தி திரை உலகில் இருந்தும் பிரபல நட்சத்திரங்கள் ரஜினி படத்தில் நடிப்பதாக கூறப்பட்டது.
குறிப்பாக பாலிவுட்டில் ரன்வீர் சிங் நடிக்கப் போவதாக பேச்சுகள் அடிபட்டன. இந்த நிலையில் சமீபத்தில் அளித்திருக்கும் பேட்டியில் பேசியிருக்கும் சிவகார்த்திகேயன், தான் ரஜினியுடன் நடிக்கப் போவதாக வந்த தகவலையே செய்திகளில் பார்த்து தான் தெரிந்து கொண்டேன். ஆனால் அப்படி ஒரு வாய்ப்பு கிடைத்தால் நிச்சயம் நடிப்பேன் என்று கூறி இருக்கிறார். சிவகார்த்திகேயன் இப்படி பேசியுள்ளதன் மூலம் அவர் இதுவரை ரஜினிகாந்த் படத்தில் ஒப்பந்தமாகவில்லை என்பது உறுதிப்பட தெரியவந்துள்ளது





