நடிகர் விஜயகாந்த் வயது காரணமாக ஏற்பட்ட முதுமை, உடல் நலத்தை கடுமையாக பாதித்த நோய்கள் காரணமாக தனது 71வது வயதில் கடந்த 28ம் தேதி காலமானார். அவரது மறைவு தமிழக மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. நடிகர், நடிகைகள், தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள், தேமுதிக கட்சியினர் மற்றும் தமிழக அரசியல் கட்சியினர் மத்தியில் பலத்த வருத்தத்தை ஏற்படுத்தியது.
உடல் நலம் பாதித்த நிலையில் இருந்த விஜயகாந்த் மீண்டும் பூரண குணமடைந்து அரசியல் வாழ்க்கைக்கு திரும்புவார். மீண்டும் படங்களில் நடிப்பார். பழையபடி அவரது உடல் ஆரோக்கியமாக மாறும் என சக நடிகர், நடிகைகளும், ரசிகர்களும், கட்சியினரும் எதிர்பார்த்திருந்த நிலையில், நாளுக்கு நாள் அவர் பலவீனம் அதிகமானதே தவிர அவர் ஆரோக்கியத்துக்கு திரும்பவே இல்லை.
குறிப்பாக சமீபத்தில் விஜயகாந்த் இறப்பதற்கு ஒரு வாரம் முன்பு, தேமுதிக கட்சி தலைமை அலுவலகத்தில் நடந்த செயற்குழு, பொதுக்குழு கூட்டத்தில் விஜயகாந்த் கலந்துக்கொண்டார். வீல் சேரில் அழைத்து வரப்பட்ட அவர் நிற்கவும், உட்காரவும் முடியாமல் அவர் பட்ட துன்பங்களை பார்த்து கட்சி நிர்வாகிகளும், தொண்டர்களும் கதறி கதறி அழுதனர்.
தேமுதிக கட்சியின் செயற்குழு, பொதுக்குழு என்றால் கண்டிப்பாக தலைவர் பங்கேற்க வேண்டும் என்ற அடிப்படையில் அவர் அந்த கூட்டத்தில் கலந்துக்கொண்டதாக விஜயகாந்த் மனைவி பிரேமலதா தெரிவித்தார். மேலும், அந்த கூட்டத்தில் கட்சியின் பொதுச் செயலாளராகவும் அவர் தேர்வு செய்யப்பட்டார். அவர் பொதுச்செயலாளராகும் போது கட்சியின் தலைவர் என்ற முறையில் விஜயகாந்த் அங்கு அழைத்து வரப்பட்டார் என்ற பேச்சும் எழுந்தது.
இந்நிலையில் கடந்த 28ம் தேதி காலை, தனியார் மருத்துவமனையில் உடல்நலக்குறைவால் விஜயகாந்த் காலமானார். பிறகு நேற்று முன்தினம் மாலை அவரது உடல் தேமுதிக தலைமை அலுவலகத்தில் நல்லடக்கம் செய்யபப்ட்டது. இந்நிலையில், டிசம்பர் மாதம் என்றாலே, பிரபலங்கள் மறைவது தொடர்ந்து வருகிறது.
குறிப்பாக இந்த ஆண்டில் முக்கிய பிரபல நடிகர்களை தமிழ் சினிமா உலகம் இழந்துவிட்டது. நடிகர்கள் மயில்சாமி, மனோபாலா, மாரிமுத்து, போண்டாமணி, இறுதியாக கேப்டன் விஜயகாந்த் எனமறைந்து விட்டனர். ஐந்து முக்கிய நடிகர்கள் இந்த 2023ம் ஆண்டில் மறைந்துள்ளனர். கடந்த 2016ல் டிசம்பர் மாதம் 5ம் தேதியன்று ஜெயலலிதா மறைந்தார். 1987ம் ஆண்டு டிசம்பர் 24ம் தேதி மக்கள் திலகம் எம்ஜிஆர் மறைந்தார். இப்போது 2023ல் டிசம்பர் 28ல் கேப்டன் விஜயகாந்த் மறைந்தார். முக்கிய தலைவர்களாக எம்ஜிஆர், ஜெயலலிதா வரிசையில் அவர்கள் இறந்த டிசம்பர் மாதத்திலேயே விஜயகாந்தும் மறைந்துவிட்டார்.





