நடிகர் சூர்யாவுக்கு படம் வெளியாகி கிட்டத்தட்ட இரண்டு வருடங்களை கடந்து விட்டது. கங்குவா திரைப்படத்தின் ரிலீஸ்க்காக அவரது ரசிகர்கள் ஏங்கிப் போய் கிடந்த நிலையில், வரும் 14ஆம் தேதி படம் வெளியாவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இதற்கான ஏற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
பத்துக்கும் மேற்பட்ட மொழிகளில் இந்த திரைப்படம் வெளியாகிறது. பிரம்மாண்ட முறையில் எடுக்கப்பட்ட கங்குவாவின் இரண்டாம் பாகத்தை எடுக்க இயக்குனர் சிறுத்தை சிவா திட்டமிட்டு இருக்கிறார். இந்த திரைப்படம், மிகப்பெரிய அளவில் வசூலை குவிக்கும் என்று தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா கூறி வருகிறார்.
இந்த திரைப்படத்தைத் தொடர்ந்து கார்த்திக் சுப்பராஜுடன் சூர்யா இணைந்து நடித்திருக்கும் திரைப்படத்தின் சூட்டிங் முடிந்து விட்டது. சூர்யாவின் நாற்பத்தி நான்காவது திரைப்படமாக இது எடுக்கப்பட்டிருக்கிறது. இது கேங்ஸ்டர் படம் இல்லை என்றும், காதல் படம் என்றும் கூறியிருக்கிறார் இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ்.
இந்த திரைப்படம் அடுத்த ஆண்டு கோடை விடுமுறையில் வெளியாக இருக்கிறது. உடனடியாக தனது 45 வது திரைப்படத்திற்கான வேலையையும் சூர்யா தொடங்கி விட்டார். பலரையும் ஆச்சரியப்படுத்தும் வகையில் அவர் ஆர்ஜே பாலாஜியுடன் இணைந்து இருக்கிறார்.
ட்ரீம் வாரியர்ஸ் நிறுவனம் இந்த திரைப்படத்தை தயாரிக்கிறது. இது கிராமத்து பின்னணியில், ஆன்மீகப் படமாக எடுக்கப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கான பிரீ ப்ரொடக்சன் பணிகளில் ஆர் ஜே பாலாஜி கவனம் செலுத்தி வருகிறார். இந்தப் படத்தை தொடங்குவதற்கு முன்பாக கங்குவா படத்தின் ப்ரோமோஷன் வேலைகளில் சூர்யா கவனம் செலுத்தி வருகிறார்.
இந்த நிலையில், அது தொடர்பான நிகழ்ச்சியில் சூர்யா பங்கேற்றபோது, தொகுப்பாளர் ஒருவர் அவரை சூப்பர் ஸ்டார் சூர்யா என்று அழைத்தார். உடனடியாக நாற்காலியில் இருந்து எழுந்த சூர்யா, எங்களுக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சார் தான். அவர் ஒருவர் தான் எப்போதும் சூப்பர் ஸ்டார். ஒருவரிடம் இருந்து பட்டத்தை பறிக்கக் கூடாது என்று பேசினார். சூர்யாவின் இந்த பேச்சு இணையத்தில் வைரலாகி வருகிறது.





