நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் மிகப்பெரிய வெற்றியை பெற்ற படம் ஜெயிலர். பாட்ஷா, படையப்பா, முத்து, பேட்ட படங்களுக்கு பிறகு ரஜினி நடிப்பில் அதிரடி சண்டை காட்சிகளில் ரசிகர்களை அசத்திய படம் என்றால் அது ஜெயிலர்தான் 515 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் மழை பொழிந்தது.
ஆனால் இந்த படத்துக்கு வந்த எதிர்மறை விமர்சனங்களும் அதிகம். மகனை சுட்டுக்கொல்லும் போலீஸ் ஹீரோ கதை இது என்பதால், சிவாஜிகணேசன் நடித்த தங்கப்பதக்கத்துலயே பார்த்துட்டோம் என பலரும் கிண்டலடித்தனர். இது ரஜினிக்கான படம். வேறு யாராவது நடித்திருந்தால் 4 நாட்கள் கூட தியேட்டரில் படம் ஓடியிருக்காது என்றும் கூறினர்.
இந்த இரண்டு விமர்சனங்களுமே யாருமே மறுக்க முடியாத உண்மையாக தான் இருந்தன. ஏனெனில் படத்தில் சிறப்பாக நடித்து ஸ்கோர் செய்தவர் என்றால் அது வில்லனாக நடித்த மலையாள நடிகர் விநாயகம்தான். எந்தா சாரே, மனசிலாயோ என்ற அந்த நடிப்பும், டயலாக் டெலிவரியும் மிகச்சிறப்பு.
இந்த படம் மட்டும் ரஜினியை விரும்பாமல் ரசிகர்கள் ஒதுக்கியிருந்தால் நெல்சன் இயக்கிய பீஸ்ட் படத்தை விட மிக மோசமான விமர்சனத்தில் சிக்கியிருக்கும். ஆனால், ரஜினி புண்ணியத்தில் ரஜினி மீது ரசிகர்கள் கொண்ட அன்பில், அபிமானத்தில் படம் பெரிய அளவில் வசூலை குவித்துவிட்டது.
இப்போது ரஜினி நடித்துவரும் வேட்டையன் படம் இதுபோன்ற ரத்தம் தெறிக்கும் காட்சிகளும், தலையை துண்டாக்கும் வன்முறை சம்பவங்களும் நிறைந்த படமாக இருக்க வாய்ப்பில்லை. நிச்சயம் படத்தில் சமூக கருத்துகளும், ஒரு குடும்ப படத்துக்கான நல்ல அம்சங்களும் இருக்கும். இதற்கு காரணம் படத்தின் இயக்குநர் தசெ ஞானவேல். படத்தில் பகத்பாசில், ராணா டகுபதி, அமிதாப் பச்சன் போன்ற நடிப்பு ஜாம்பவான்கள் இருக்கின்றனர். வரும் ஏப்ரல், மே ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்பட்ட இந்த படம், செப்டம்பர் அக்டோபர் மாதம்தான் ரிலீஸ் ஆகும் எனத் தெரிகிறது.
ஜெயிலர் திரைக்கு வந்து சில மாதங்கள் ஆகிறது. பொங்கலுக்கு லால் சலாம் வருகிறது. கங்குவா, அயலான், கேப்டன் மில்லர் அடுத்தடுத்து பெரிய படங்களான வருகின்றன. அதனால் தனது படத்தை ஆறு மாதங்கள் வரை தள்ளி ரிலீஸ் செய்தால்தான், ஜெயிலர் படத்தை விட அதிக வசூலை குவிக்க முடியும் என ரஜினி கணக்கு போட்டுதான், படத்தின் ரிலீஸ் தள்ளி வைத்திருப்பதாக கூறப்படுகிறது.





