தமிழகத்தின் முன்னாள் முதல்வர், திமுக தலைவர் கருணாநிதி நூற்றாண்டையொட்டி கலைஞர் 100 விழா, சமீபத்தில் சென்னையில் நடத்தப்பட்டது. முதலில் நேரு ஸ்டேடியம், பிறகு சேப்பாக்கம் மைதானம், கலைவாணர் அரங்கம் என திட்டமிடப்பட்டு, கடைசியில் ரேஸ் கோர்ஸ் மைதானத்தில் நடத்தப்பட்டது.
கடந்த மாதம் 24ம் தேதிதான் இவ்விழா நடத்த முதலில் முடிவானது. ஆனால் அன்று எம்ஜிஆர் நினைவு நாள் என்ற சர்ச்சை எழுந்தது. அதற்கு பின் மிக்ஜம் புயல் ஏற்படுத்திய கனமழையால் சென்னை மாநகரம் பல இடங்களில் வெள்ளத்தில் தவித்தது. இதையடுத்து விழா, ஜனவரி 6ம் தேதிக்கு மாற்றப்பட்டது.
இந்த விழாவை பொருத்த வைர தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர் சங்கம், பெப்ஸி, திரைப்பட இயக்குநர்கள் சங்கம் உள்ளிட்ட 5 அமைப்புகள் சேர்ந்துதான் விழாவை ஏற்பாடு செய்து நடத்தியது. முதலில் ஸ்டாலினுக்கு விழா நடத்த முயற்சித்த தமிழ் சினிமா துறையினரை, தன் தந்தை கருணாநிதிக்கு நடத்துங்கள் எனக் கூறியவர் ஸ்டாலின்தான் என்ற தகவலும் உள்ளது.
இந்த விழாவை பொருத்தவரை, பலருக்கும் பலத்த ஏமாற்றத்தை தந்தது. குறிப்பாக 20 ஆயிரம் பேர் அமரும் வசதிகொண்ட அந்த இடத்தில் வந்த பார்வையாளர்கள் கூட்டம் 1000 பேரைக் கூட தாண்டவில்லை. ரஜினி, கமல் மேடையில் பேசிய போது எதிரில் இருந்த காலி சேர்களை பார்த்துதான் பேசி இருக்கின்றனர். விழாவுக்கு வந்தவர்களில் பலரும் தங்களை விழா ஏற்பாட்டாளர்கள் கண்டுகொள்ளாததால் பாதியிலேயே கிளம்பிச் சென்றிருக்கின்றனர்.
இந்த விழாவில் விஜய், அஜீத்குமார் இருவருமே பங்கேற்கவில்லை. அவர்கள் இருவரும் வந்திருந்தால் கூட்டம் அதிகமாக வந்திருக்கும். விழாவும் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும் என பலரும் விமர்சித்து வருகின்றனர். ஆனால் அரசியல் துவங்கும் விஜயும், விஜயகாந்த் மறைவுக்கே வராத அஜீத்குமாரும் இந்த விழாவுக்கு வர வாய்ப்பில்லை என்று விழா ஏற்பாட்டாளர்களுக்கு முன்பே தெரிந்துள்ளது.
விஜய், அஜீத்குமார் வரவில்லை என விமர்சிக்கும் பலரும், ஸ்டாலின் குடும்பத்தை சேர்ந்த நடிகர், சகோதரர் மகனுமான அருள்நிதி இந்த விழாவில் கலந்துக்கொண்டாரா, தாத்தா விழாவில் பேரனே கலந்துக்கொள்ளவில்லை. அதே போல் கருணாநிதி வீட்டு சம்பந்தியான நடிகர் சியான் விக்ரம், அவரது குடும்பத்தினர் இந்த விழாவில் பங்கேற்கவில்லை என்றும் பலர் சர்ச்சையை கிளப்பி விட்டுள்ளனர். அது இப்போது வைரலாகி வருகிறது.





