நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் ஆறு ஆண்டு கால பெரும் போராட்டத்துக்கு பிறகு, தமிழ்நாடு முழுவதும் நேற்று திரைக்கு வந்தது டைரக்டர் ரவிக்குமார் இயக்கத்தில் அயலான். படத்தை பொருத்தவரை பாசிட்டிவ் ரிசல்ட்தான் கிடைத்திருக்கிறது. அதுவே சிவகார்த்திகேயனுக்கு பெரிய வெற்றிதான்.
ஒரு படத்தை வேகமாக ரசிகர்கள் மத்தியில் இழுத்துச் செல்வது முதல் நாள் முதல் காட்சி ரிசல்ட்தான். அதுமட்டும் நல்லவிதமாக அமைந்துவிட்டால், தொடர்ந்து படம் நல்லா இருக்கு, சூப்பரா இருக்கு என்ற விமர்சனங்களே தியேட்டர்களுக்கு கூட்டம் கூட்டமாக ரசிகர்களை அழைத்து வந்துவிடும்.
இசையமைப்பாளர் இமான், சிவகார்த்திகேயன் மீது வைத்த குற்றச்சாட்டுக்கு பிறகு வரும் முதல் படம் என்ற நிலையில், அதன் பாதிப்பு தியேட்டர்களில் தெரியுமா என பார்த்தால், அவரவர் பர்சனல் லைப் தாண்டி, ஒரு கலைஞனாக, நடிகராக சிவகார்த்திகேயன் இதில் சிறந்த பங்களிப்பை செய்திருக்கிறாரா என்ற கோணத்தில்தான் ரசிகர்களின் பார்வை இருக்கிறது. இது மிக அவசியமானதும் கூட.
அதுமட்டுமின்றி, இன்று நேற்று நாளை படத்துக்கு பிறகு இயக்குநர் ரவிக்குமாரின் 2வது படம் இது. இளம் இயக்குநர்களில் சினிமாவை அடுத்தக்கட்ட நகர்வுக்கு கொண்டு செல்ல முயற்சிக்கும் ஒருவராக, இவரது வெற்றியும் மிக முக்கியம். அந்த வகையில் இந்த படம் ஹீரோ, டைரக்டர் இருவருக்குமே வெற்றி தந்த படமாக தான் இருக்கிறது.
அயலான் படம் ரிலீஸ் ஆன சில தியேட்டர்களுக்கு நேரில் செல்ல நடிகர் சிவகார்த்திகேயன், படம் பார்த்த ரசிகர்களின் ஆரவாரத்தை நேரில் கண்டார். அதுமட்டுமின்றி சோஷியல் மீடியாவிலும் படம் குறித்த பாசிட்டிவ் ரிவ்யூ அதிகமாக கிடைத்துள்ளது. அந்த மகிழ்ச்சியில் ஒரு தியேட்டரில் திரண்டிருந்த ரசிகர்களின் ஆரவாரங்களுக்கு மத்தியில் சிவகார்த்திகேயன் செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது நடிகர் சிவகார்த்திகேயன் கூறுகையில், ரொம்ப வருஷங்களுக்கு அப்புறம் டைரக்டர் ரவிக்குமாரை பேரை ஸ்கிரீன்ல பார்க்கறதுதான் எனக்கு ரொம்ப பெரிய சந்தோஷம். சப்போர்ட் பண்ணின எல்லோருக்குமே ரொம்ப பெரிய நன்றி. பேமிலியோட தியேட்டருக்கு போய் பாருங்க.பிரண்ட்ஸ் எல்லோரையும் கூட்டிட்டு போய் பாருங்க. உங்க எல்லோருக்கும் கண்டிப்பா இந்த படம் பிடிக்கும், என்று கூறியிருக்கிறார்.





