தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் என அழைக்கப்படுபவர் நயன்தாரா. முதலில் ஹீரோக்களுடன் பாட்டுப்பாடி டான்ஸ் ஆடிக்கொண்டிருந்த நயன்தாரா, ஒரு கட்டத்துக்கு பிறகு ஹீரோயின் ஓரியண்டட் படங்களில் நடிக்க ஆரம்பித்தார். அந்த படங்களுக்கு பலத்த வரவேற்பும் கிடைக்க, வேற லெவலில் அட்ராசிட்டி செய்ய ஆரம்பித்தார் நயன்தாரா.
இப்போது ஒரு படத்துக்கு ரூ. 10 கோடி முதல் ரூ. 12 கோடி வரை அவர் சம்பளம் கேட்கும் நிலையில், பாலிவுட்டில் ஜவான் படம் தந்த வெற்றியும் ஒரு காரணமாக இருக்கலாம். ஆனால் அவர் பெரிய அளவில் தமிழில் எதிர்பார்த்த அன்னபூரணி படம் வரவேற்பு பெறவில்லை. படம் ஊத்திக்கொண்டது என்றும் சொல்லலாம்.
இந்நிலையில், இந்த படத்தை நெட்பிளிக்ஸ் ஓடிடி நிறுவனம் ரூ. 19 கோடி கொடுத்து, உரிமம் பெற்றது. கடந்த டிச. 28ம் தேதி இந்த படம் ஓடிடியில் வெளியானது. இதில், ராமர் சீதை அசைவம் சாப்பிட்டதாக ஒரு வசனக்காட்சி வந்த நிலையில், இந்தி வெர்சனில் இது மிகப்பெரிய விவகாரத்தை உருவாக்கியது.
அயோத்தியில் ராமர் கோவில் திறக்கப்படும் இந்த சூழலில் இப்படி ஒரு வசனத்துடன் படம் இருந்ததால், பலவிதமான சர்ச்சைகள் உருவாகி, நெட்பிளிக்ஸ் நிறுவனம் அந்த படத்தையே நீக்கி விட்டது. இப்போது மீண்டும் அந்த படத்தை, குறிப்பிட்ட காட்சிகளை நீக்கி தந்தால் மீண்டும் நெட்பிளிக்ஸ்சில் ஒளிபரப்ப தயாராக இருக்கிறது.
அதேவேளையில் 12 மணி நேரத்துக்குள் அந்த சர்ச்சைக்குரிய வசனங்களை நீக்கி படத்தை கொடுங்கள். இல்லாவிட்டால், அந்த படத்துக்காக உரிமம் பெற தரப்பட்ட தொகையில், ரூ. 12 கோடியை திருப்பிக்கொடுங்கள் என, நெட்பிளிக்ஸ் நிறுவனம், தயாரிப்பாளரிடம் கேட்டுள்ளது. அதிர்ந்துபோன தயாரிப்பாளர், என்ன செய்வது என்று தெரியாமல் தவிக்கிறார். ஏனெனில் படத்தில் உள்ள காட்சிகளை 12 மணி நேரத்துக்குள் நீக்குவதில் நடைமுறை சிக்கல்கள் நீடிக்கிறது.
அன்னபூரணி விவகாரம் இப்படி ஆனதை அடுத்து, சன்நெக்ஸ்ட் உள்ளிட்ட மற்ற டிஜிட்டல் நிறுவனங்களும் தங்களது அக்ரிமெண்டில் புதிய ஒரு நிபந்தனையை சேர்த்துள்ளனர். அதாவது, உங்களிடம் (தயாரிப்பாளர்) உரிமம் பெற, நாங்கள் பல கோடி ரூபாய் விலை கொடுத்து பெறும் படங்களில், இப்படி சர்ச்சைக்குரிய காட்சிகள் இடம்பெற்று, பிரச்னை எதுவும் பின்னால் ஏற்பட்டால், படத்தின் உரிமத்துக்காக நாங்கள் கொடுத்த மொத்த தொகையையும் திருப்பித் தர வேண்டும் என்பதுதான் அந்த புதிய நிபந்தனை. இதனால், தயாரிப்பாளர்கள் பலரும் பலத்த அதிர்ச்சியில் உள்ளனர்.





