நடிகர் விஜய் தமிழக அரசியல் களத்தில் விரைவில் இறங்கப் போகிறார். அதற்கான ஆயத்தப் பணிகளில், விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் தீவிர ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். தமிழக முன்னேற்ற கழகம் என்ற பெயரில் கட்சியை துவங்கவும், மதுரையில் கட்சியின் முதல் மாநாடு நடத்தவும் விஜய் திட்டமிட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.
விஜய் அரசியல் கட்சி துவங்குவது, இப்போதைய ஆளுங்கட்சிக்கு மிகப்பெரிய தலைவலியாக மாறி வருகிறது. ஏனெனில் கருணாநிதி, அவருக்கு பிறகு கருணாநிதி மகன் ஸ்டாலின், ஸ்டாலினுக்கு பிறகு முதல்வர் இடத்தில் ஸ்டாலின் மகன் உதயநிதி, உதயநிதிக்கு பிறகு அவரது மகன் இன்பநிதி என்று தமிழக முதல்வர் நாற்காலி பதவியை, திமுகவின் பரம்பரை சொத்தாக வைத்துக்கொள்ள திமுக திட்டமிட்டுள்ளது.
இந்நிலையில் விஜய் அரசியல் களத்தில், புது ரத்தம் பாய்ச்சுவது போல் உள்ளே வருகிறார். விஜயை பொருத்தவரை மக்கள் மத்தியில் நல்ல பெயர் உள்ளது. குறிப்பாக இளைஞர்கள், பள்ளி கல்லூரி மாணவர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. குறிப்பாக பெண்களும் விஜய் ரசிகைகளாக இருக்கின்றனர். அதனால் அவரது அரசியல் வருகை நிச்சயமாக, தமிழக அரசியலில் ஒரு மாற்றத்தை கொண்டு வர அதிக வாய்ப்புள்ளதாக, அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
இதற்கிடையே சமீபத்தில்தான் தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த், மறைந்தார். அவர் ஏழு ஆண்டுகளாக உடல் நலமின்றி படுத்த படுக்கையாகி விட்ட நிலையில், கட்சியை அவரது மனைவி பிரேமலதாவும், தம்பி எல்கே சுதீஷூம் தான் கவனித்துக்கொண்டனர். அவர்கள் ஆலோசனைப்படி தான் கட்சி நிர்வாகம் நடந்தது.
விஜயகாந்த் அளவுக்கு, இவர்களது அரசியல் நிர்வாகம் சிறப்பாக இல்லை. கட்சி நிர்வாகிகளிடம் பலத்த ஏமாற்றமும், அதிருப்தியும் ஏற்பட்டதால்தான் கட்சியில் இருந்த சில முக்கிய நிர்வாகிகள் திமுக, அதிமுக கட்சிகளுக்கு இடம் மாறினர். ஆனால் விஜயகாந்த் மீது அன்பு கொண்ட சில நெருக்கமானவர்கள், கட்சியை விட்டு விலகாமல் இருந்தனர். ஆனால் இனி அது தொடராது. ஏனெனில் பிரேமலதா நிர்வாகத்தில் தேமுதிக பெரிய அளவில் எடுபட வாய்ப்பில்லை என்பதே அரசியல் விமர்சகர்களின் கருத்தாக உள்ளது.
இந்த சூழலில், விஜய் கட்சி துவங்கும் பட்சத்தில் தேமுதிக வைச் சேர்ந்த பலர் விஜய் பக்கம் கூட்டம் கூட்டமாக வர அதிக வாய்ப்புள்ளது. ஏனெனில் அதுதான் அரசியல். எங்கே பதவி வாய்ப்பும், செல்வாக்கும் இருக்கிறதோ அங்குதான் செல்வது அரசியல்வாதியின் கொள்கையாக இருக்கும். அதனால் விஜய் பலம் மேலும் அதிகரித்தால், வரும் சட்டசபை தேர்தலில் அது திமுகவுக்கு பாதிப்பை அதிகரிக்கச் செய்யும். மேலும் புதிய வாக்காளர்களின் ஓட்டுகளும் கணிசமாக விஜய்க்கு செல்ல அதிக வாய்ப்புள்ளது என்பது திமுகவினருக்கு கிலியை தந்துள்ளது.





