சிவகார்த்திகேயனுக்கு கடந்த ஆண்டு வெளியான அமரன் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது. ராஜ்குமார் பெரியசாமி இயக்கி இருந்த இந்த திரைப்படத்தை, கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. ராணுவ வீரர் மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையை மையப்படுத்தி எடுக்கப்பட்டிருந்த இந்த திரைப்படம், விமர்சன ரீதியாகவும் வரவேற்பை பெற்றது.
குறிப்பாக படத்தின் கிளைமாக்ஸ் பலரையும் உலுக்கி எடுத்ததால் இந்த திரைப்படம், 300 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் ஈட்டியது. இதனைத் தொடர்ந்து ஏ ஆர் முருகதாஸ் உடன் மதராசி திரைப்படத்திற்காக இணைந்தார் சிவகார்த்திகேயன். கடந்த ஐந்தாம் தேதி இந்த திரைப்படம், உலகம் முழுவதும் வெளியானது.
ருக்மணி வசந்த் கதாநாயகியாக நடிக்க, வித்யூட் ஜம்வால், விக்ராந்த், பிஜு மேனன் என ஏராளமான நட்சத்திரங்கள் இதில் இடம் பெற்றனர். துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களை சென்னைக்கு கடத்தும் ஒரு கும்பலை சிறப்பு படைக் குழு தடுக்க பார்க்கிறது. இதற்கு நடுவே ஹீரோ சிவகார்த்திகேயன் எப்படி வந்தார் என்பதை மையப்படுத்திதான் இந்த திரைப்படத்தை இயக்கி இருக்கிறார் முருகதாஸ்.
மதராசி திரைப்படம் ஒட்டுமொத்தமாக நன்றாக வந்திருப்பதாகவே விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர். படமும் கடந்த வார இறுதி நாட்களில் நல்ல வசூலை பெற்றது. பலரும் குடும்பம் குடும்பமாக படையெடுத்ததால், படத்தின் வசூல் அதிகரித்தது. கிட்டத்தட்ட அந்த திரைப்படம் 60 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்திருப்பதாக சொல்லப்படுகிறது.
ஏ ஆர் முருகதாஸுக்கு இது மிகப்பெரிய திருப்புமுனையை கொடுக்கவில்லை என்றாலும், முந்தைய திரைப்படங்களின் தோல்விகளில் இருந்து அவர் மீண்டு விட்டார் என்றே சொல்லலாம் என விமர்சகர்கள் கூறி வருகின்றனர். இப்படியான சூழலில் மதராசி திரைப்படத்தை பார்த்துவிட்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தும் படக்குழுவினரை பாராட்டி இருக்கிறார். அவர் பாராட்டியதை எக்ஸ் வலைதள மூலம் பகிர்ந்திருக்கிறார் சிவகார்த்திகேயன்.
அதில் தனது தலைவர் என்னை பாராட்டியதாகவும், மை காட்… என்னா பர்பாமென்ஸ்… என்னா ஆக்சன்ஸ்… சூப்பர் சூப்பர் எஸ் கே… எனக்கு ரொம்ப புடிச்சி இருந்துச்சு… ஆக்சன் ஹீரோ ஆயிட்டீங்க காட் பிளஸ்… என்று தெரிவித்ததாக குறிப்பிட்டு இருக்கிறார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து முருகதாஸ் இயக்கிய தர்பார் திரைப்படம் படுதோல்வி அடைந்தது குறிப்பிடத்தக்கது.





