பெயர், செல்வாக்கு, புகழ் இன்று மூன்றையும் அடைய வேண்டும் என்றால் இந்த மூன்று துறைகளில் ஏதேனும் ஒன்றில் இருந்தால் போதும் என்பார்கள். அந்த வகையில் அரசியல், சினிமா, விளையாட்டு என்றும் அந்த 3 துறைகளாக கூறப்படுகிறது. அரசியலில் ஜெயிக்க பேச்சுத்திறமை, நிர்வாகத் திறமை வேண்டும். விளையாட்டிலும் திறமை மிக முக்கியம்.
ஆனால் சினிமா துறையை பொருத்த வரை, ஏதேனும் ஒரு படத்தில் நடிக்க வாய்ப்பு மட்டும் அமைந்துவிட்டால் போதும். நல்ல நேரமும், அதிர்ஷ்டமும் இருந்தால் அவர்கள் அடுத்த சில ஆண்டுகளில் கோடிகளில் புரள முடியும். அதற்கு பல உதாரண நடிகர்களை, இப்போதைய சினிமாவில் கூட காட்டலாம்.
நடிகர்கள் வடிவேலு, சூரி, சந்தானம் போன்றவர்களை சொல்ல முடியும். இவர்கள் எல்லாம் கடந்த 15, 20 ஆண்டுகளுக்கு முன், சில ஆயிரங்களில் சம்பளம் வாங்கிக்கொண்டு சினிமாவில் சில காட்சிகளில் நடித்தவர்கள். ஆனால் இன்று கோடிகளில் சம்பளம் வாங்குகின்றனர். அதிலும் காமெடி நடிகர்களாக இருந்தவர்கள், இன்று பல கோடிகளில் சம்பளம் வாங்கும் ஹீரோக்களாக மாறி உள்ளனர்.
முன்பெல்லாம் சினிமாவில் நடித்த பணத்தை, சினிமாவிலேயே செலவு செய்வது, சொந்த படம் தயாரிப்பது போன்ற தவறுகளை பல நடிகர், நடிகைகள் செய்து வந்தனர். ஆனால் இப்போதைய நடிகர் நடிகையர் பலரும் மிகவும் தெளிவாக, விவரமாக உள்ளனர். அதனால் படத்தில் நடிக்க வாய்ப்பு இல்லாவிட்டாலும் பல லட்சங்கள் அவர்களுக்கு வருமானம் மாதந்தோறும் குவிகிறது.
நடிகைகள் ராதா, அம்பிகாவுக்கு சென்னையில் பல சொந்த வீடுகள் உள்ளது. அதுதவிர ஏஆர்எஸ் ஸ்டுடியோ வாடகை என பல லட்சம் ரூபாய் வருமானம், பல ஆண்டுகளாக கிடைக்கிறது. இதே போல் நடிகை சிநேகாவுக்கு பெங்களூருவில் நிறைய அபார்ட்மெண்டுகள் உள்ளதாக கூறப்படுகிறது. நடிகர் செந்திலுக்கு 40 போர்ஷன்கள் கொண்ட குடியிருப்புகள் உள்ளதால், அதன் வாடகை குவிகிறது.
அதே போல் நடிகர் சின்னி ஜெயந்துக்கும் தி. நகரில் மூன்றடுக்கு காம்பளக்ஸ் வீடுகள் இருப்பதாகவும், அதன் வாடகை லட்சக்கணக்கில் வருவதாக தெரிய வந்துள்ளது. நடிகர் ராமராஜனும் பல வீடுகளை கட்டி வாடகைக்கு விட்டுள்ளார். இதுபோல் பல முன்னணி நடிகர் நடிகையர் தங்களது பல வீடுகளை வாடகைக்கு விட்டு லட்சக்கணக்கில் பணம் சம்பாதித்து வருகின்றனர். அதனால் படங்களில் நடிக்க வாய்ப்பு இல்லை என்றாலும், வீட்டில் இருந்தபடியே வீட்டு வாடகை மூலம் மாதந்தோறும் லட்சக்கணக்கில் வருமானம் அடைந்து வருகின்றனர்.





