கடந்த ஆண்டு சிவகார்த்திகேயன் நடிப்பில் மாவீரன் திரைப்படம் வெளியானது. தமிழ் சினிமாவில் பழக்கப்பட்ட சூப்பர் ஹீரோ கதை தான் என்றாலும், அதனை வித்தியாசமாக காட்சிப்படுத்திய விதத்தில் மாவீரன் திரைப்படம் பாராட்டை பெற்றது. குறிப்பாக அதில் யோகி பாபுவின் காமெடி பெரிய அளவில் பேசப்பட்டது.
இந்தப் படத்திற்குப் பிறகு சிவகார்த்திகேயன் நடிப்பில் நீண்ட நாள் கிடப்பில் இருந்த அயலான் திரைப்படம் ரிலீஸ் செய்யப்பட்டது. பொங்கல் பண்டிகைக்கு வெளியான இந்த திரைப்படம், மிகப்பெரும் எதிர்பார்ப்பிற்கு மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்றது. இருப்பினும் அந்த திரைப்படம் விமர்சன ரீதியாக எந்த குறையையும் வைக்கவில்லை.
இப்படியான சூழ்நிலையில் தனது அடுத்த திரைப்படத்தில் கவனம் செலுத்தி வருகிறார் சிவகார்த்திகேயன். இந்த திரைப்படத்தை ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கிறது. ரங்கூன் திரைப்படத்தை எடுத்த ராஜ்குமார் பெரியசாமி இந்த படத்தை இயக்கி வருகிறார். இதில் கதாநாயகியாக சாய் பல்லவி நடித்துள்ளார்.
ராணுவ பின்னணியில் இந்த திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. சென்னையைச் சேர்ந்த மேஜர் முகுந்தன் வரதராஜன் என்பவரின் வாழ்க்கையை மையமாக வைத்து இந்த திரைப்படம் எடுக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இதனை உறுதிப்படுத்தும் வகையில், சமீபத்தில் வெளியான டீசரில் சிவகார்த்திகேயனுக்கு முகுந்த் என பெயர் வைக்கப்பட்டது காண்பிக்கப்பட்டது.
இந்தப் படத்திற்கு, படக்குழுவினர் அமரன் எனப் பெயர் வைத்துள்ளனர். இந்த டைட்டில் தமிழ் சினிமாவில் இடம் பெறுவது இது முதல் முறை அல்ல. 1992 ஆம் ஆண்டு நவரச நாயகன் கார்த்திக் நடிப்பில் அமரன் திரைப்படம் வெளியாகி இருந்தது. அதில் இடம்பெற்ற வெத்தலை போட்ட சோக்குல பாடல் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இப்படியான சூழ்நிலைதான் அந்தத் படத்தின் டைட்டில் மீண்டும் வைக்கப்பட்டுள்ளது.
இது குறித்து இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், இந்த திரைப்படத்திற்கான திரைக்கதையை எழுதும்போதே என் மனதிற்குள் அமரன் என்ற டைட்டில் தான் தோன்றியது. இந்த நேரத்தில் அமரன் டைட்டிலுக்காக சம்மதித்த அந்த திரைப்படத்தின் இயக்குனர் ராஜேஸ்வருக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். அமரன் டைட்டிலுக்கு உறுதி அளித்த கார்த்திக் மற்றும் கௌதம் கார்த்திக் ஆகியோருக்கும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.





