நடிகர் மணிகண்டன் தமிழ் சினிமாவில் கவனிக்கப்படும் ஒரு நடிகராக மாறி வருகிறார். கதை ஆசிரியரான மணிகண்டன் முதலில் காலா படத்தில், ரஜினி மகனாக லெனின் கேரக்டரில் நடித்து, ரசிகர்களின் மனம் கவர்ந்தார். காலா படத்துக்கு முன்பே, காதலும் கடந்து போகும் உள்ளிட்ட சில படங்களில் நடித்திருக்கிறார்.
ஆனால் காலா படத்தில்தான் அவருக்கு ரசிகர்கள் மத்தியில் அறிமுகம் கிடைத்தது. ஏனெனில் ரஜினி மகனாக அதில் நடித்து அசத்தியிருந்தார். அடுத்து ஜெய்பீம் படத்தில், சிறைக்கைதியாக நடித்து ரசிகர்களின் மனங்களை பதற வைத்தார். போலீஸ் லாக்கப்பில் அவர் அடிபட்டு துடிக்கும் அந்த ரணமான காட்சிகளில் அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தினார்.
தொடர்ந்து குட்நைட் படத்தில் மோட்டார் மோகனு கேரக்டரில் நடித்து, ரசிகர்களின் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்ற மணிகண்டன், இப்போது லவ்வர் என்ற படத்தில் நடித்துள்ளார். லவ்வர் படத்துக்கும் ரசிகர்கள் மத்தியில் பாசிட்டிவ் ரெஸ்பான்ஸ் கிடைத்துள்ளது.
குறிப்பாக சமீபத்தில் வெளியான லால் சலாம் படத்தை விட, மணிகண்டன் நடித்த லவ்வர் படத்துக்கு வரும் கூட்டம் மிக அதிகமாக உள்ளது. லால் சலாம் படத்துக்கே லவ்வர் படம் டப் கொடுக்கிறதே என்று சினிமா ரசிகர்கள் மத்தியில் பரவலாக பேச்சு எழுந்துள்ளது. இப்படி நல்ல கதைகளை தேர்வு செய்து நடித்தால் மணிகண்டன் மிக விரைவில் முன்னணி நடிகராகி விட அதிக வாய்ப்புள்ளது.
இப்போதைய சூழலில் மணிகண்டன் 4 படங்களை கைவசம் வைத்திருக்கிறார். ஆனால் கதை சொல்ல வரும் இயக்குநர்களிடம் நிறைய கேள்விகளை கேட்கிறார். மற்ற கதாபாத்திரங்கள் குறித்தும் நிறைய விசாரிக்கிறார். அதனால் அவரது கிடுக்கிப்பிடி கேள்விகளுக்கு பதில் சொல்லி முடிப்பதற்குள் இயக்குநர்கள் திணறி விடுகின்றனர்.
ஆனால் கதை ஓகே ஆகி ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வந்துவிட்டால், மணிகண்டன் ஒரு வார்த்தை பேசாமல், அந்த காட்சிகளை சிறப்பாக நடித்துக்கொடுக்கிறார். கதை சொல்ல வரும் இயக்குநர்களிடம் அவர் விளக்கம், சந்தேகம் கேட்க காரணம், முதலில் அவரும் ஒரு கதை ஆசிரியர். அதனால் இதை பாசிட்டிவ் விஷயமாகவே இயக்குநர்கள் பார்க்கின்றனர்.





