தமிழ் சினிமாவில் மிகவும் கவனிக்கப்பட்ட இயக்குனர்களில் ஒருவராக விளங்கியவர் இயக்குனர் சேரன். கேஎஸ் ரவிக்குமாரிடம் பல படங்களில் உதவி இயக்குனராக பணிபுரிந்த சேரன், பாரதி கண்ணம்மா படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். முதல் படமே மிகப்பெரிய வெற்றியை பெற்றது.
பார்த்திபன், மீனா, விஜயகுமார், ரஞ்சித், வடிவேலு, ராஜா உள்ளிட்டோர் நடித்த இந்த படத்தில், பண்ணணையில் வேலை பார்க்கும் தாழ்ந்த ஜாதி வேலைக்காரனை, பண்ணையாரின் மகளே காதலிப்பதுதான் கதை. பார்த்திபனை விரும்பும் மீனா, அதை மறுக்கும் பார்த்தின், மீனாவின் அப்பாவாக விஜயகுமார் நடித்த இந்த படம் பெரிய அளவில் வெற்றி பெற்றது.
இந்த படத்துக்கு பிறகு சேரன் மிகப்பெரிய அளவில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார், தொடர்ந்து பொற்காலம், இன்னொரு தேசிய கீதம், ஆட்டோகிராப், தவமாய் தவமிருந்து, பாண்டவர் பூமி உள்ளிட்ட படங்களை இயக்கிய சேரன், அடுத்து சில படங்களில் நடிக்கவும் செய்தார்.
இதில் அவர் இயக்கிய ஆட்டோகிராப், தவமாய் தவமிருந்து படங்களில் அவரே நாயகனாக நடித்தார். தங்கர்பச்சான் இயக்கிய சொல்ல மறந்த கதை படத்திலும் நடித்தார். பிரிவோம் சந்திப்போம், ராமன் தேடிய சீதை, முரண் போன்ற படங்களில் சேரனின் நடிப்பும் மிகவும் ரசிக்கும்படி இருந்தது.
சேரன், அதிக கோபக்காரர். மிக விரைவில் உணர்ச்சி வசப்படுபவர். கோபமும், அழுகையும் அவருக்கு விரைவில் வந்துவிடும் என்பதை 2019ம் ஆண்டில் அவர் பங்கேற்ற விஜய் டிவி பிக்பாஸ் நிகழ்ச்சியில் அப்பட்டமாக வெளிப்பட்டது. சராசரி மனிதராக சேரன் எளிதாக யார் மீதும் கோபத்தை வெளிப்படுத்தி விடுவார் என்று படப்பிடிப்பு தளத்தில் பலரும் கூறியிருக்கின்றனர்.
அந்த வகையில், கடலூரில் சேரன் காரில் சென்றிருக்கிறார். அப்போது பின்னால் வந்த பஸ், தொடர்ந்து ஹாரன் ஒலி எழுப்பி காரை ஒதுங்கிச் செல்ல அறிவுறுத்தி இருக்கிறது. ஆனால் தொடர்ந்து ஹாரன் ஒலி எழுப்பி பஸ் டிரைவர் டார்ச்சர் செய்ததால், ஆவேசமடைந்த சேரன் காரை நிறுத்திவிட்டு நேராக பஸ் டிரைவர், கண்டக்டரிடம் சென்று வாக்குவாதம் செய்து, தகராறில் ஈடுபட்டுள்ளார். இது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.





